கையில் ராமர் கோயில் வாட்ச்.. சல்மான் கானுக்கு வந்தது புது சிக்கல்
சல்மான் கான் ராமர் கோயில் பதிப்பு கைக்கடிகாரத்தை அணிவது “ஹராம்” என மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி தெரிவித்துள்ளார்.

சல்மான் கானும், சர்ச்சைகளும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் எனலாம். அந்த வகையில் சல்மான் கானை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு திரையில் வெளியாக தயாராக உள்ளது.
படம் வெளியீடு குறித்து சல்மான் கான் தனது X மற்றும் இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஸ்டைலான புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றினை போட்டு இருந்தார். அது தான், இப்போது பெரிய சிக்கலாக மாறியுள்ளது. ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தில் கையில் ஒரு வாட்ச் ஒன்றினை கட்டியிருந்தார் சல்மான் கான். அந்த கைக்கடிகாரத்தின் விலை 34 லட்சம் மட்டுமே. ஆமாம், நீங்கள் சரியாக தான் படித்தீர்கள்.. அந்த கைக்கடிகாரத்தின் விலை 34 லட்சம்!
See you in theatres this Eid! pic.twitter.com/XlC2xFkIQ0 — Salman Khan (@BeingSalmanKhan) March 27, 2025
அந்த கைக்கடிகாரத்தினை தயாரித்தது புகழ்பெற்ற ஜேக்கப்&கோ நிறுவனம் தான். ஒரு கைக்கடிகாரத்தினால் சல்மான் கானுக்கு என்ன சிக்கல்? என்பதை தெரிந்துக் கொள்வதற்கு நாம் காலச்சக்கரத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம்.
பாபர் மசூதி இடிப்பு- உச்சநீதிமன்ற தீர்ப்பு
இந்தியாவின் நீதித்துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என பட்டியல் எடுத்தால் அதில் நிச்சயம் “பாபர் மசூதி இடிப்பு” தொடர்பான வழக்கு இடம்பெறும். 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையும் வழக்கில் ஒரு பகுதியாகும்.
பல ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகேய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. வேறோரு இடத்தில் மசூதி கட்ட இடமளிக்க உத்தரவிடப்பட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து, அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானப் பணி வேகமெடுத்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடி, திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்போடு வெகு விமர்சையாக அயோத்தி இராமர் கோவிலின் குடமுழுக்கு விழா நடைப்பெற்றது.
ராம் ஜென்மபூமி டைட்டானியம் வாட்ச்:
கைக்கடிகாரம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜேக்கப்&கோ நிறுவனம், இராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்வினை முன்னிட்டு பிரத்யேகமாக “ராம் ஜென்மபூமி டைட்டானியம்” என்கிற கைக்கடிகாரத்தினை அறிமுகப்படுத்தியது. மொத்தமே 49 கைக்கடிகாரம் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றே தான் நடிகர் சல்மான் கான் அந்த புகைப்படத்தில் தனது கையில் கட்டியிருந்தார்.
இந்த கைக்கடிகாரத்தில் ராமர் கோயிலின் கட்டமைப்பு, இராமர் மற்றும் ஹனுமானின் உருவங்களும் இடம்பெற்றிருக்கும். சல்மான் கான் ஒரு இஸ்லாமியராக இருக்கும் நிலையில், ராம ஜென்மபூமி இயக்கத்தை கொண்டாடும் வகையிலான கைக்கடிகாரத்தை அணிந்திருப்பது இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சல்மான் கான் செய்தது ஹராம்:
அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத் தலைவருமான மௌலானா ஷாஹாபுதீன் ரஸ்வி இதுக்குறித்து கூறுகையில், “பாலிவுட் நடிகர் சல்மான் கான் ராமர் கோயில் பதிப்பு கடிகாரத்தை அணிவது “ஹராம்” (இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது)” என குறிப்பிட்டுள்ளார். இஸ்லாம் மதத்தினை பின்பற்றும் பலர் சல்மான் கானின் ரசிகராக இருக்கும் நிலையில், இஸ்லாத்திற்கு விரோதமான செயல்களில் அவர் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சல்மான் கானின் சமூக வலைத்தள பதிவிற்கு கீழ் சிலர் மோசமான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






