பாஜக ஆளாத மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது- செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆனால், ஆளாத மாநிலங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி ஏப்ரல் 6-ஆம் தேதி இராமேஸ்வரம் வருகிறார். தமிழ்நாட்டிற்கு எதற்கு பிரதமர் வருகிறார்? தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு என்ன செய்திருக்கிறது? ஒவ்வொரு மாநிலமும் ஒன்றிய அரசுடன் இணைந்து சமூக உறவில் இருக்க வேண்டும் என்று தான் அரசியலமைப்பு சொல்கிறது.
கூட்டாட்சியை மதிக்காமல் இந்திய இறையாண்மையை பாதுகாக்காத பிரதமர் மோடியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்டத்திலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளோம். அடுத்த தலைமுறையை உருவாக்கும் துறை, பள்ளி கல்வித்துறை. அந்தத் துறையை சீரழிப்பதற்காக 2,350 கோடி ரூபாய் நிதியை தராமல் வேறு மாநிலத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 52 கேந்திர வித்யாலயா பள்ளிகள் இருக்கிறது. அதில் ஆங்கிலமும், இந்தியும் தான் கற்றுத் தரப்படுகிறது. மூன்றாவது மொழி என்று எதுவும் இல்லை. தற்பொழுது ஏன் மும்மொழிக் கொள்கையை ஒன்றிய அரசு திணிக்கிறது. இலங்கை கடற்படை அத்துமீறி நமது மீனவர்களை சுடுகிறார்கள். வலைகளை சேதப்படுத்துகிறார்கள். இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி காட்ட இருக்கிறோம்.
அரைவேக்காடாக அண்ணாமலை பேசுகிறார். அவர் முறையாக படிக்க வேண்டும். பாஜக அரசில் என்ன நடந்தது என்று பார்க்க வேண்டும். மோடியின் உரையை படிக்க சொல்லுங்கள் அண்ணாமலையை. அண்ணாமலை பேசுவது தேசிய கட்சிக்கு அழகா? தலித் மக்களுக்கு எதிரான ஆர்எஸ்எஸ்-இன் அடக்குமுறை இது. செல்வப் பெருந்தகை இதில் எங்கே வந்தார்? மாற்றம் என்பது மாற்ற முடியாதது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுக்கிறது. ஆளாத மாநிலங்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் நீங்கள் சும்மா இருப்பீர்களா? ஊழல் நடந்திருந்தால் ஒவ்வொரு முறையும் மோடி அரசு விருது கொடுக்குமா? தவறு நடந்தால் விருது கொடுக்க முடியுமா? தமிழ்நாடு தவிர தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஏன் அதை நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்?” என்று கூறினார்.
What's Your Reaction?






