அரசியல்

15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - கொந்தளித்த மா.சுப்பிரமணியன்
15 லட்சம் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? - மா.சுப்பிரமணியன்

காலநிலை மாற்றம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களை எதிர்கொள்வது குறித்த ஒரு நாள் கருத்தரங்கு சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கியுள்ளோம். வடகிழக்கு பருவமழை குறித்து லயோலா கல்லூரி மழைக்காலத்துக்கு முந்தைய நடவடிக்கை குறித்து ஒருநாள் கருத்தரங்கை நடத்துகிறது. தமிழகத்தில் புயல், பருவமழைக் காலங்களில் அரசுடன் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மாணவர்களும் சமூக பிரச்சனைகளில் ஒருங்கிணைவது  முக்கியத்துவமான ஒன்று.

மெரினா விமான சாகசத்தின்போது இறப்பு ஏதும் ஏற்படவில்லை என்று தமிழ்நாடு அரசு கூறவில்லை. 1932இல் தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை, 93ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது, தனது பலத்தை விமானப்படை காட்டுவதற்கு சென்னையை தேர்வு செய்தனர்.

தலைமைச் செயலாளர் தலைமையில் 2 கூட்டம் நடத்தி சேவைத் துறைகளை ஒதுங்கிணைத்தது. தமிழ்நாடு அரசு விமானத்துறை கேட்ட அனைத்து வசதியையும் செய்து கொடுத்தோம். இந்திய ராணுவத்தின் சார்பாக பல்வேறு மருத்துவக் குழுக்கள் மெரினாவில் இருந்தனர்.  அவசர உதவிக்கு 40 ஆம்புலன்ஸ்கள் மெரினாவில் தயார் நிலையில் இருந்தன. ஆயிரக்கணக்கான பாரா மெடிக்கல் குழுவினர் பணியில் இருந்தனர்.

100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்குமாறு விமானப் படை கூறியிருந்தது. ஆனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருந்தன. போதுமான ரத்தம் தயார் நிலையில் இருந்தது. 65 மருத்துவர்கள் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்தனர்.

15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் குடை, தண்ணீர் எடுத்து வருமாறும், கண்ணாடி, தொப்பி அணிந்து வருமாறு விமானப் படை கூறியிருந்தது. வெயிலே இருக்காது எல்லோரும் வாருங்கள் என விமானப் படை கூறவில்லை, வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றே கூறியிருந்தனர்.

மெரினா விமானப் படை சாகசத்தின்போது இறப்பு ஏற்பட்டது வருத்தத்திற்குரியது. இறந்தோருக்கு அனுதாபம் தெரிவித்து கொள்கிறோம், இதை வைத்து அரசியல் செய்ய நினைத்தால் தோற்று போய் விடுவர். 

உயிரிழந்த 5 நபர்களும் இறந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப் பலனின்றி யாரும் மரணிக்கவில்லை. 5 மரணமும் வெயிலின் தாக்கத்தாலே ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் நேற்று 102 பேர் பாதிப்பு, மருத்துவமனையில் 7 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

15 லட்சம் பேரும் மெரினா முழுவதும் மட்டுமிருந்து பார்க்கவில்லை. வான் எல்லை தெரியும் பல இடங்களில் இருந்தும் பார்த்துள்ளனர். கால் முறிவு, மூச்சுத் திணறல், குடலிறக்கம், செரிமான கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சிகிச்சை பெறுகின்றனர். தேவையான அனைத்தையும் அரசு செய்திருந்தது.

மெரினாவுக்கே வராத, பூதக் கண்ணாடி வைத்து குறை சொல்லும் சில நக்கீரர்கள்தான் அரசை குறை சொல்கின்றனர். தட்ப வெப்பநிலையை பொறுத்து விமான சாகச நேரத்தை விமானப் படைதான் முடிவு செய்திருந்தது. விமானப் படையை குறைகூற முடியாது. வெயிலின் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம். கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை.

இறந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும். 15 லட்சம் பேர் கூடினாலும் சிறிய நெரிசல் கூட ஏற்படவில்லை. இது ஒரு வரலாற்று சிறப்பு. 5 பேர் இறந்ததற்கு வெயில்தான் காரணம் என்று கூறிய பிறகும் அதையே கேட்டு  குளிர்காய நினைக்க கூடாது.

15 லட்சத்தும் பேருக்கு 15 லட்சம் காவலர்களா போட முடியும்? 7,500 காவலர்கள் பணியில் இருந்தனர். விநாயகர் சதுர்த்திக்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களை விட குறைவான காவலர்களே நேற்று பணியில் இருந்தது ஏன் என கேட்கிறீர்கள். வடநாட்டு ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசல்களை எல்லாம் குறிப்பிட்டு சொல்லி நான் லாலி...லாவணி பாட விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.