ஆன்மிகம்

Lord Ganesha: விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவதற்கு இதுதான் காரணமா?

விநாயகனே வினை தீர்ப்பவனே என்று பாடல் வரிகள் ஒலிப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஒரு நல்ல நிகழ்ச்சியின் தொடக்கத்தில், விநாயகரை வணங்க செல்பவர்கள், கையில் அருகம்புல் மாலையுடன் சென்று வழிபாடு செய்வர். எந்த காரியத்திலும் தொடக்கமாக விளங்கக் கூடியவர் விநாயகர் தான். ஆனால், அருகம்புல் மாலை சாற்றுகிறார்கள் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அருகம்புல் மாலை பற்றி நாமும் அறிந்துகொள்வோம்.

Lord Ganesha: விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவதற்கு இதுதான் காரணமா?
அருகம்புல் மாலையுடன் விநாயகர்

விநாயகருக்கு அருகம்புல் சாற்றுவது, காலம்காலமாக தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும். விநாயகர், மிகவும் பிரசித்தமான கடவுளாகக் கருதப்பட்டு, அனைத்து செயல்களுக்கும் முன் வழிபடப்படும் முதன்மையானவராக திகழ்கிறார். அருகம்புல், விநாயகரின் பிரியமான செடியாகவும், விநாயகருக்கு அர்ப்பணிக்கப்படும் முக்கிய பூஜை பொருளாகவும் விளங்குகிறது. 

விநாயகரை வணங்க சிறப்பான நாள்

புதன்கிழமையான இன்று விநாயக பெருமானை வணங்க மிகச் சிறந்த நாள். எந்தவொரு காரியத்தையும் துவங்கும் முன்பு, விநாயகரை முதன்மை கடவுளாக வணங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வி என்றால் விசேஷமான, நாயகர் என்றால் தலைமையானவர், விசேஷமான தலைமைத்துவம் படைத்தவர் விநாயகர் என்று கூறுவர்.

எல்லா நாட்களிலும் விநாயக பெருமானை வணங்கலாம். ஆனால், தேய்பிறை வரக்கூடிய சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் விநாயக வழிபாடு மிக சிறந்த பலன்களை தரும். விநாயகருக்கு பால், பழம், பொரி, அப்பம், கடலை, கோலுக்கட்டை போன்றவற்றையுடன் எருகம் பூ மற்றும் அருகம் புல் மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், பலருக்கு ஏன் விநாயக பெருமானுக்கு அருகம் புல் மாலை அணிவித்து வழிபடுகிறோம் என்று தெரிந்திருக்காது. 

அருகம்புல் வரலாறு

விநாயகருக்கு ஏன் அருகம் புல் அணிவிக்கிறோம் என்றால், ஒரு நாள் தேவர்களுக்கு துன்பம் விளைவித்த அனலாசுரன் என்ற அசுரனுடன் விநாயகர் போரிட்டார். அப்போது அனலாசுரன் வாயில் இருந்து நெருப்பை கக்கி விநாயகரின் படையை அழித்தான். இதனைக்கண்டு கோபம் கொண்ட விநாயகர் அசுரனை விழுங்கினார். விநாயகரின் வயிற்றுக்கு சென்ற அசுரன் அவரின் வயிற்றில் நெருப்பை கக்கினான்.  அசுரனின் வெப்பம் காரணமாக விநாயகரின் உடல் எரிந்தது. கங்கை நீர், பனிக்கட்டிகள் என எல்லாம் பயன்படுத்தினும் விநாயகரின் வெப்பம் தணியவில்லை.  

வலியில் துடித்த விநாயகருக்கு அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகள், ஒரு ஜான் அடியுள்ள 21 அருகம்புற்களை மாலையாக விநாயகருக்கு சாத்தினர். சூடு தணிந்து விநாயகரின் உடல் குளிர்ந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அருகம்புல் சாற்றி என்னை வணங்குபவர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்றாராம். இவ்வாறு அருகம்புல் மாலை சாற்றி புதன்கிழமைகளில் விநாயக பெருமானை வழிபட துன்பம் நீங்கி, நாம் நினைத்த காரியம் கைக்கூடும்.