கச்சத்தீவை மீட்கக்கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்றதை சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் 4 ஆண்டுகளாக திமுக என்ன நடவடிக்கை எடுத்தது? 16 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தபோது அதிமுக என்ன செய்தது? கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் 54 கடிதங்களை எழுதியுள்ளோம் என்றார்.
அதிமுக ஆட்சி காலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமாரை டெல்லிக்கு அழைத்துச் சென்று கச்சத்தீவு விவகாரம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தியதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசை ஏன் கலைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பழனிசாம், எங்களின் கோரிக்கைகளை ஏற்காததால் வெளியேறினோம் என்றார். இதையடுத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அதிமுக ஆட்சி காலத்திலும் பலர் மத்திய அமைச்சர்களாகவும், துணை சபாநாயகர்களாகவும் இருந்துள்ளனர். அப்போதும் இந்த விவகாரத்தில் தீர்வு காணவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உறுப்பினர்கள் தீர்மானத்தை ஒட்டி பேச வேண்டும் என்றும், அதில் உள்ள அரசியல் விவகாரங்கள் குறித்து பேச வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.