சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் சிவக்குமார். இவர் சேலையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இன்று (ஏப்ரல் 3) காலை இவர் இரவு பணியை முடித்து விட்டு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆலந்தூர் ஆசர்கானா பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது தாம்பரத்திலிருந்து கிண்டி நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவக்குமாருக்கு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உயிருக்கு போராடிய சிவக்குமாரை சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.