அறிவுரை கூறிய நபர் மீது கொடூர தாக்குதல்.. பிரபல ரவுடியால் பரபரப்பு
ஆலங்குடியில் அறிவுரை கூறியவர் மற்றும் அவரது இரண்டு மகன்களை உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கிய பிரபல ரவுடி மற்றும் அவரது கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் ஆலங்குடியில் டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் அடிக்கும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான மணிகண்டன் என்கிற ப்ளேடு மணி என்பவரிடம் அஜித்குமாரின் தந்தை நாடிமுத்து 'ஏன் இவ்வாறு ரவுடிசம் செய்கிறாய், நமது பகுதி இளைஞர்கள் இவ்வாறு செய்வது தவறு' என்று அறிவுரை கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ப்ளேடு மணி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கலைஞர் காலனி பொது விநியோக அங்காடி அருகே இருந்த நாடிமுத்துவைக் உருட்டுக்கட்டைகள் மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நாடிமுத்துவை அவரது குடும்பத்தினர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற ப்ளேடு மணி கும்பல் நாடிமுத்துவின் மகன்களான பிரசாந்த் மற்றும் அஜித்குமாரை கட்டையாலும், வாகன சாவியை வைத்து குத்தியும் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் காயமடைந்த மூவருக்கும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி காவல் துறையினர் இது குறித்து விசாரணை நடத்துவதோடு, ப்ளேடு மணி மற்றும் அவரது கும்பலைத் தேடி வருகின்றனர். பிரபல ரவுடியான ப்ளேடு மணி மீது மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






