போதை மையமாகும் வீட்டு வசதி குடியிருப்புகள்
தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடியிருப்போர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
மதுபாட்டில்கள், போதை ஊசி சிரிஞ்சி, போதை மாத்திரிகளின் அட்டைகள் என போதைக்களமாக காட்சி அளிக்கும் இந்த இடம் ஏதோ சென்னையின் ஒதுக்குப்புறம் அல்ல... தலைநகரின் மையப்பகுதியான சைதாப்பேட்டையில் உள்ள வீட்டு வசதி வாரிய பாழடைந்த வீடுதான்.
சி.ஐ.டி நகர் 4வது மெயின் ரோட்டில்தான் இந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இங்கு பாழடைந்து குப்பைத்தொட்டிகளோடு துர்நாற்றத்துடன் காணப்படும் இந்த வீடுகள் போதைப்பொருட்களை பயன்படுத்தப்படும் போதை ஹப்பாகவே மாறி உள்ளது.
இடித்தும் இடிக்கப்படாமலும் காணப்படும் இந்த வீடுகளுக்கு வந்து இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவது, போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, கஞ்சா புகைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், இந்த பாழடைந்த வீடுகளை இலவச மதுபான பாராகவும் அவர்கள் பயன்படுத்தி வருவதற்கு அங்கு குவிந்து கிடக்கும் மதுபாட்டில்களே சாட்சியாக உள்ளது.
போதைக்காக இந்த இடம் தேடி வருபவர்கள் செய்யும் அலப்பறைகளால், அவர்களைக் கண்டித்தால், வீடுகள் மீது மதுபாட்டில்கள் சிலர் வீசி விட்டு செல்வதால் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிசிடிவி அந்த தெருவில் வைத்தால் கூட போதை ஆசாமிகள் உடைத்து விட்டு செல்வதாகவும் கூறுகின்றனர். போலீசார் வைத்துள்ள சிசிடிவியை கூட போதை ஆசாமிகள் உடைத்து விட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தலைநகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடத்தில் போதை ஆசாமிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று குடியிருப்போர் வைக்கும் வேண்டுகோள் அரசின் செவிகளுக்கு சென்றடையுமா?
What's Your Reaction?






