”திமுகவை யாராலும் அசைக்க முடியாது” - விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதில்!
தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, திமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய கட்சித் தலைவர் விஜய், பெரியார் கொள்கையில் கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுக்கப்போவது இல்லை எனவும் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் வார்த்தை முக்கியம் எனவும் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார்.
மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சி என கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும் திராவிட மாடல் எனக் கூறி பெரியார் பெயரை பயன்படுத்தி ஒரு குடும்பம் தமிழ்நாட்டைச் சுரண்டி வருகிறது எனவும் விஜய் விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது எனக் கூறியவர், ஏ டீம், பி டீம் என பொய் பிரசாரம் செய்து தங்களை வீழ்த்த முடியாது எனவும் தெரிவித்தார்.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்காக மக்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு வாக்கும் அணுகுண்டாக மாறும் எனவும் விஜய் கூறியுள்ளார். தங்களை நம்பி வரும் கூட்டணிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
தனது வாழ்க்கையின் உச்சத்தையும், ஊதியத்தையும் உதறிவிட்டு உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளதாகவும் தமிழ்நாட்டின் வெற்றிக்காக புதிய விதியொன்றை செய்வோம் எனவும் விஜய் தெரிவித்தார்.
இந்நிலையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள பெரம்பூர் சப்வே, அகரம், ஜெகந்நாதன் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கொளத்தூர் பகிர்ந்த பணியிடம் வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் படிக்க: "விஜய்-ன் முடிவு மக்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது".. "சீமானின் மறு உருவமாக, விஜய் விளங்குவார்"..அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்
இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து அவர் பேசுகையில், ”கூடிக் கலைகின்ற மேகக் கூட்டம் இல்லை திராவிட முன்னேற்ற கழகம். கொள்கை சார்ந்த கூட்டம் திராவிட முன்னேற்றக் கழகம். எப்படிப்பட்ட புயல் மழை வெள்ளம் வந்தாலும் அனைத்தையும் எதிர்த்து கடல் அலை முரணாக இருக்கின்றபோது கூட அதை நேர்த்தியாக நடத்தி செலுத்துகின்ற மாலுமி எங்கள் தமிழக முதல்வர் உள்ள வரை எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்ற கழகத்தை அசைத்துப் பார்க்க முடியாது.”என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?