'ஒரு தாயாக உங்களிடம் கேட்கிறேன்'.. மருத்துவ மாணவியின் தாய் உருக்கமான கடிதம்!
''எனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார். மருத்துவராகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. பல்வேறு மக்களுக்கு இலவசாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார்'' என்று மருத்துவ மாணவியின் தாய் கூறியுள்ளார்.

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை சஞ்சய் ராய் என்ற ஒரே ஒரு நபரை மட்டுமே போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, மருத்துவ மாணவியின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. மேலும் மாணவி படுகொலையை கண்டித்தும், மருத்துவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கக்கோரியும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ளது. மருத்துவ மாணவி படுகொலை நடந்து ஒரு மாதம் நெருங்கும் நிலையில், இதுவரை ஒரு குற்றவாளி மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய பலர் சுதந்திரமாக வெளியே வலம் வருவதாகவும், அவர்களை பிடிப்பதில் சிபிஐ அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், எனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க உதவிபுரியும்படி மருத்துவர்களுக்கு மருத்துவ மாணவியின் தாய் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அனைத்து மருத்துவ பேராசியர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், ''எனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார். அதற்கு நீங்கள் பக்கபலமாக இருந்தீர்கள்.
மருத்துவராகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. பல்வேறு மக்களுக்கு இலவசாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவள் நினைத்தது நடக்கவில்லை. ஆசிரியர்கள் தினமான இன்று (அதாவது நேற்று) அனைத்து ஆசிரியர்களும் எனது மகள் சார்பாக சல்யூட் அடிக்கிறேன்.
எனது மகளும் உங்களைப் போன்ற ஆசிரியர்களை கொண்டிருந்தார். மருத்துவமனையில் பணியில் இருந்தபோது எனது மகள் கொலை செய்யப்பட்டது அவளின் கனவையும் நொறுக்கியுள்ளது. எனது மகளின் படுகொலை தொடர்பாக உங்களுக்கு தெரிந்த தகவல்கள், சாட்சியங்களை தெரிவிக்கும்படி ஒரு தாயாக மருத்துவ பேராசியர்கள், மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்'' என்று மருத்துவ மாணவியின் தாய் கூறியுள்ளார்.
What's Your Reaction?






