Mahavishnu Case: மகாவிஷ்ணு மீது காவல்நிலையத்தில் புகார்
சென்னை அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது. மகா விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அரசு பள்ளியில் இந்நிகழ்ச்சி நடத்தியதற்கு கண்டனங்கள் வலுத்தன.
இதையடுத்து சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தியது தொடர்பாக அப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் விசாரணைக் குழு நேரில் சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேப்போல் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மஹா விஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், 2016 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் பிரிவு 72அ படியும் மகா விஷ்ணுவிற்கு எதிராக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மனு கொடுத்துள்ளனர்.
What's Your Reaction?






