ஐபிஎல் 2025: நிறைவேறிய 17 வருட கனவு.. கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்
50 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூர் அணியின் வெற்றியை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 18-வது சீசனின் 8-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய இரு அணிகள் மோதின.
சென்னை அணி தங்களுடைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதேபோன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடக்கப்போட்டியில், கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற போட்டியில் இவ்விரு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது.
யார் வெற்றி பெறுவார்?
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் எடுத்தது. கேப்டன் ரஜத் படிதார் 32 பந்துகளில் 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, பில் சாட் 32 ரன்னும், விராட் கோலி 31 ரன்னும், தேவ்தத் படிகல் 27 ரன்னும் எடுத்தனர்.சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் நூர் அகமது மூன்று விக்கெட்டுகளும், மதீஸ் பதிரனா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 31 பந்துகளில் 41 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கியவர்கள் சொர்ப நேரத்தில் ஆட்டமிழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அபார வெற்றி
இறுதியாக ஜடேஜா 25 ரன் எடுத்தார். கடைசி ஓவரில் எம்.எஸ்.தோனி 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்று தனது 17 வருட கனவை நிறைவேற்றியது.
17 வருடக்கனவு
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி 17 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் தற்போது சொந்த மண்ணில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியதை ஆர்.சி.பி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ’கப்பு முக்கியம் பிகிலு’ என்பது போல இந்த முறை கப்பு எங்களுக்கு தான் என்று உற்சாகத்துடன் ஆர்.சி.பி ரசிகர்கள் தெரிவித்தனர்.
What's Your Reaction?






