இதுக்கு ஒரு எண்டே இல்லையா..? மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. என்ன நடந்தது?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 8 அடுக்கு கொண்ட இந்த அலுவலகத்தில் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் என பல்வேறு பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் நேற்று (மார்ச் 29) இரவு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தான் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தாகவும் ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்க உள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆணையர் அலுவலகம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று 8 தளத்தில் செயல் பட்டு வரும் அனைத்து அலுவலகத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து வேப்பேரி போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார், உண்மையில் எதற்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில், சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த நிலையில் அவரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






