Dengue Fever Spread In Tamilnadu
பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 568 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவல் என்பது அதிகரிக்க தொடங்கி உள்ளது. முன்னதாக, கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக – கர்நாடகா எல்லையில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது.
டெங்கு பாதிப்பு ஏடிஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படுகிறது. இந்த வகை கொசுக்கள் நன்னீரில் வாழும் தன்மை கொண்டது. பரவலாக மழை பெய்து வருவதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்று, அதன் மூலம் கொசு அதிகரிக்கிறது. அதனால், ஏடிஸ் கொசுவை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருப்பினும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழை பெய்து வரும் சூழலில் டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10ம் தேதி 86 பேர், 11ம் தேதி 83 பேர், 12ம் தேதி 106 பேர், 13ம் தேதி 71 பேர், 14ம் தேதி 71 பேர், 15ம் தேதி 37 பேர், 16ம் தேதி 114 பேர் என மொத்தம் 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 16ம் தேதி வரை 5,976 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 நபர்கள் மட்டுமே இறந்துள்ளனர்.
இந்த டெங்கு பரவலை தடுக்க பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தண்ணீர் தொட்டிகள், தண்ணீரை சேமித்து வைக்கும் இடங்களை பாதுபாப்பாக மூடி வைக்கவும், மாநகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து தெளிக்கவும், அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவும் வேண்டும்'' என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 5,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.