பொங்கல் திருநாள்: சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள்
பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சூரியனை வணங்கும் விதமாக அதிகாலையில் மக்கள் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வணங்கினர். பொங்கல் திருநாளையொட்டி கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன. இருந்தாலும், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இல்லாமல் தவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: UGC NET 2024: ஜனவரி 15 நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் மட்டுமல்லாமல் முன்பதிவில்லா சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டது.
இந்நிலையில், பொங்கலையொட்டி சென்னையில் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் சென்னையின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் சாலைகள் கூட வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. சாதாரண நாட்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அண்ணாசாலை, வடபழனி, அசோக் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளும் இன்று வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் படிக்க: கமலா என பெயர் மாற்றம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி
பொதுவாக, தமிழ்நாட்டில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக சென்னைக்கு இடம் பெயர்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். இதனால், காலையிலும், மாலையிலும் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதுபோன்ற, பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
What's Your Reaction?