ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
![ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_678618e14439b.jpg)
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து, வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதாவது, ஜனவரி 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஜனவரி 20-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அடுத்து வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுக சார்பாக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவும், தேமுதிக, பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. ஆனால், நாம் தமிழர் கட்சி உறுதியாக போட்டியிடும் என சீமான் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி களம் இறங்குவார் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், வேட்பாளர் சீதாலட்சுமி, கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு குழு ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)