இந்தியா முழுவதும் மூடப்படும் முகேஷ் அம்பானியின் சென்ட்ரோ ஸ்டோர்.. இதுதான் காரணம்..
இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 24 இடங்களிலும் 33 கடைகளிலும் உள்ள சென்ட்ரோ ஃபேஷன் ஸ்டோரைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் சில்லறை விற்பனை பிரிவான, சென்ட்ரோ டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களை தொடங்கினார். அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஃபியூச்சர் குழுமத்தின் சொத்தை வாங்கியப்பிறகு, குத்தகைக்கு எடுத்துக்கொண்ட இடங்களில், ஃபியூச்சர் குழுமத்தின் சென்ட்ரலை (Central) சென்ட்ரோவாக (Centro) பெயர் மாற்றம் செய்யப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வந்தது.
சுமார் 450 உள்ளூர் மற்றும் உலகளாவிய பிராண்டுகளை விற்பனை செய்யும் சென்ட்ரோ, டிபார்ட்மென்ட் ஸ்டோர் வடிவத்தில் துபாயை சேர்ந்த லைஃப்ஸ்டைல் இன்டர்நேஷனல் மற்றும் ரஹேஜாவின் ஷாப்பர்ஸ் ஸ்டாப் ஆகியவற்றிற்கு போட்டியாக செயல்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள மூன்று சென்ட்ரோ ஸ்டோர்களை தற்காலிமாக மூடிவிட்டது. தற்போது இந்த மாத இறுதிக்குள் மேலும் இரண்டு டஜன் கடைகளை மூட திட்டமிட்டுள்ளது.
விற்பனை பொருட்களை காட்சிப்படுத்துவது, விற்பனை செய்வது ஆகியவை இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முடிவுக்கான காரணத்தையும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, தனது பிராண்டுகள் மற்றும் லேபிள்களை புதிய வடிவத்தில் மீண்டும் நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், கடைகள் மீண்டும் திறக்கப்படும்போது, ரிலையன்ஸ் ரீடெய்ல் ஏற்கனவே உள்ள உள்ளூர் மற்றும் உலகளாவிய பிராண்டுகளை மீண்டும் ஒருங்கிணைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தனது சொந்த பிராண்டுகளான Azorte மற்றும் Yousta போன்றவற்றை ஷாப்-இன்-ஷாப் மாடலாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. சொந்த பிராண்டுகளோடு Gap மற்றும் Superdry இலிருந்தும் சுமார் 80 வெளிநாடு பிராண்டுகளை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது ஒரு தற்காலிக மூடல் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
What's Your Reaction?