விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு..? வைகோ முன்னாள் உதவியாளரிடம் விசாரணை
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக தங்க வைக்க உதவி செய்ததாக கூறி வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை நாட்டைச் சேர்ந்த நவநாதன், இலக்கியன் என்பவர்கள் சட்டவிரோதமாக சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் தங்கி இருப்பதாக தமிழக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார், மாங்காடு சென்று நவநாதன், இலக்கியனை கடந்த மாதம் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நவநாதன் கடந்த 2015-ஆம் கள்ளத்தோணி மூலமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்து தங்கி இருந்ததாகவும், அப்போது போலீசில் தன்னுடைய விவரங்களை பதிவு செய்ததும் தெரியவந்தது.மேலும், நவநாதன் ஜவுளி வியாபாரம் செய்து வந்ததோடு தன்னுடைய விவரங்களை புதுப்பிக்காமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
போலி ஆவணங்கள் மூலம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றதும் கியூ பிரிவு விசாரணையில் தெரியவந்தது. இதேபோல் இலக்கியனும் தனது மகளுடன் கள்ளத்தோணி மூலம் தமிழகத்திற்கு வந்து நவநாதனுடன் தங்கி இருந்தது தெரிய வந்தது. இலக்கியன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததையும் கியூ பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.
விசாரணைக்கு பிறகு இரண்டு பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் பிரசாத் என்பவரிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசாத் தான் இரண்டு பேருக்கும் அடைக்கலம் கொடுத்து பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கியூ பிரிவு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை கேகே நகர் பகுதியில் வசித்து வந்த பிரசாத்தின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கைதான நவநாதன், இலக்கியன் தமிழகத்திற்கு வரும் போது சுமார் 250 கிராம் வெடி மருந்து கொண்டு வந்ததாகவும் அது தற்போது காணாமல் போய் விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அது குறித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணான தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இலங்கையைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?