திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.. பக்தர்கள் சாமி தரிசனம்...!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் தை தெப்பத் திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும். தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை உற்சவர் சன்னதியின் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தெப்ப திருவிழாவிற்கான கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.
முன்னதாக கொடிக்கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மா இலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற பிப்ரவரி 6-ஆம் தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய சட்டத்தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி ரத வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ஆம் தேதி காலையில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருக்கும் மிதவை தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடிக்க தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து அருள் பாலிப்பார். இதே போல இரவு 7 மணி அளவில் மின்னொளியிலும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?