கந்த சஷ்டி விழா.. களைகட்டிய பழமுதிர் சோலை முருகன் கோயில்!

பழமுதிர் சோலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Nov 6, 2024 - 08:40
 0
கந்த சஷ்டி விழா.. களைகட்டிய பழமுதிர் சோலை முருகன் கோயில்!
கந்த சஷ்டி விழா.. களைகட்டிய பழமுதிர் சோலை முருகன் கோயில்!

முருகப்பெருமானுக்குரிய மிக முக்கிய விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று. மாதம் தோறும் சஷ்டி திதி வருவதுண்டு. ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி திதி சிறப்புடையது. பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. 

அந்த வகையில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிரசித்திபெற்ற அழகர்மலை உச்சியில், முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலையில் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஐப்பசி மாதம் நடைபெறக்கூடிய சஷ்டி விழா கடந்த 02ஆம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து, சுவாமிக்கு தினமும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், நான்காம் நாள் நிகழ்ச்சியாக இன்று (நவ.05) சோலைமலை மண்டபத்தில் சமேதராக  உள்ள சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதனையடுத்து ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி எழுந்தருளப்பட்டு, திருக்கோயிலைச் சுற்றியுள்ள மண்டப வீதிகளில், சிவ வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நாளை (நவ. 06) 5ஆம் நாள் நிகழ்ச்சியாக சண்முகா அர்ச்சனையும், சப்பர வீதி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து 6ஆம் நாள் நிகழ்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், திருக்கோயில் அருகேயுள்ள நாவல்மரத்தடி விநாயகர் கோயில் முன்பு நடைபெற உள்ளது. இதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை 07ஆம் நாள் விழாவாக திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து அன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் சஷ்டி விழா நிறைவடைய உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், முருகன் திருகோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow