கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள திருவேங்கிடம் என்ற இடத்தில் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வழிபாட்டு தலத்தில், மூலவராக வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் வழிபடப்படும் பெருமாளின் அம்சமாக பார்க்கப்படுகிறார்.
கேரள திருப்பதி
பெரும்பாலான கேரளக் கோவில்கள் போன்றே, இக்கோவிலும், அதன் இருப்பிடத்தின் பெயரையே பெற்றுள்ளது. இந்த பகுதி மக்களுக்கு, இத்தலத்தில் விளங்கும் வெங்கடாஜலபதி பெருமாள் மிகுந்த அருள்தரும் தெய்வமாக போற்றப்படுகிறார். இதனால், இத்திருக்கோவில் 'கேரள திருப்பதி' என வழங்கப்படுகிறது.
தினசரி காலை 4.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.30 மணி வரையும், பக்தர்களுக்கு தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது. திருவேங்கிடம் வெங்கடாஜலபதி கோவில், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலிலிருந்து, கிழக்கே சுமார் 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தல வரலாறு
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு, திருமலை திருப்பதியின் தீவிர பக்தரான ஒரு முனிவர், திருமலை திருப்பதி தலத்திற்கு ஈடாக ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு ஒரு கோவிலை, 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் குருவாயூரில் எழுப்ப வேண்டும் என விரும்பினார்.
பின்னர் இப்போது இக்கோவில் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுத்து, திருப்பதியில் இருந்து ஒரு கருங்கல் சிலையைக் கொண்டு வந்து, இந்த தலத்தில் நிறுவி பிரமாண்ட கோவிலை உருவாக்கியிருக்கிறார். காலப்பொக்கில் அன்னிய படையெடுப்புகளால் இக்கோவில் உள்ள மூலவர் சிலை சேதப்படுத்தப்பட்டது.
மக்கள் வழிபாடு
1974 ஆம் ஆண்டு, சிலரால் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், இந்த கோவிலின் மூலவர் ஸ்ரீ வெங்கடாஜலபதி என்பதும், இதை ஒரு முனிவர் கட்டியிருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால், 1977-ம் ஆண்டு திருப்பதியில் இருந்து மூலவர் ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கான ஒரு புதிய திருவுருவக் கற்சிலை கொண்டு வரப்பட்டு, உரிய வழிபாடுகளுடன் இக்கோவிலில் நிறுவப்பட்டு தற்போது வரை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இத்திருக்கோவில் வழிபட்டால் திருமலை திருப்பதிக்கு சென்று வந்த பலனை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் கேரள மக்களால் இக்கோவில் 'கேரள திருப்பதி' என்று வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது.
ஆன்மிகம்
திருப்பதி போக முடியலையா? திருப்பதி சென்ற பலன் தரும் கிடைக்கும் `கேரள திருப்பதி-க்கு போங்க!
கேரள திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாக உள்ளது. இக்கோவிலை 'கேரள திருப்பதி' என்று சிறப்புப் பெயர்க்கொண்டு பக்தர்கள் அழைக்கின்றனர்.