மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புண்ணிய நதிகள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது புண்ணியம் என்பதால் உலகின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் மகா கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் திரிவேணி சங்கமத்தில் அதிகப்படியான பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
சமீபத்தில் மெளனி அமாவாசை அன்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. புண்ணிய நதியில் நீராடுவதற்காக அதிகாலையில் பக்தர்கள் தடுப்புகளை உடைத்துக் கொண்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
30 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மீண்டும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கூட்ட நெரிசல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மெளனி அமாவாசையின் போது ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர்.
இந்நிலையில், இன்று (பிப். 5) டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ் வந்த பிரதமர் நரேந்திர மோடி, திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன் உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார். மோடி வருகையையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பொதுவாக பெளஷ பெளர்ணமி (ஜன. 13), மகா சங்கராந்தி (ஜன. 14), மெளனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 3), மாகி பெளர்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய ஆறு நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து துறவிகள், பக்தர்கள் ஊர்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?