இந்தியா

காதல் வலை விரித்து ரூ.2.5 கோடி அபேஸ்: பெண் டிஎஸ்பியின் மோசடி அம்பலம்!

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் வலை விரித்து ரூ.2.5 கோடி அபேஸ்: பெண் டிஎஸ்பியின் மோசடி அம்பலம்!
Chhattisgarh govt suspends DSP Kalpana Verma over alleged financial misconduct
சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரைத் திட்டமிட்டுத் தனது காதல் வலையில் வீழ்த்தி, பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகளைப் பறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை மதிக்க வேண்டிய உயர் அதிகாரி ஒருவரே இத்தகைய மோசடியில் ஈடுபட்டது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பணத் தகராறு முதல் காதல் நாடகம் வரை

இந்த விவகாரத்தின் பின்னணி ராய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் டாண்டன் என்பவரிடம் தொடங்குகிறது. இவருக்கும், குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் டிஎஸ்பி கல்பனா வர்மாவின் தந்தைக்கும் இடையே ஏற்கனவே காசோலை தொடர்பான பணத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் அந்தத் தொழிலதிபரை கல்பனா வர்மா நெருங்கியுள்ளார். அவருடன் காதல் கொள்வது போல நடித்து, மிகவும் நெருக்கமாகப் பழகியுள்ளார். இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அந்தத் தொழிலதிபரிடம் இருந்து பல முறை சிறுகச் சிறுகப் பணத்தைப் பெற்றுள்ளார்.

ரூ.2.5 கோடி கொள்ளையும் மிரட்டலும்

தொழிலதிபர் தீபக் டாண்டன் அளித்த புகாரின்படி, கல்பனா வர்மா தன்னிடம் இருந்து 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம், ஒரு விலை உயர்ந்த சொகுசு கார், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 2.5 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தொழிலதிபர், தான் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, கல்பனா வர்மா தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை மிரட்டியதாகத் தெரிகிறது.

அதிரடி இடைநீக்கம் மற்றும் குற்றச்சாட்டுகள்

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கல்பனா வர்மா மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, அவர் காவல்துறையின் உயர் ரகசியத் தகவல்களைத் தனது செல்போன் மூலம் தொழிலதிபருக்குக் கசியவிட்டுப் பாதுகாப்பு விதிகளை மீறியதும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, தண்டேவாடா மாவட்டத்தில் பணியாற்றி வந்த டிஎஸ்பி கல்பனா வர்மாவை சட்டீஸ்கர் அரசு நேற்று அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.