ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா
ஐசிசியின் சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி' விருதை வெல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி' விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வெல்வதற்காக ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி பும்ரா இந்த விருதை தட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி' விருதை வெல்லும் ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டு ராகுல் டிராவிட்டும், 2010 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரும், 2016-ஆம் ஆண்டு அஸ்வினும், 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு விராட் கோலியும் இந்த விருதை வென்றுள்ளனர்.
வேக பந்து வீச்சாளர் பும்ரா கடந்த ஆண்டு நடைபெற்ற 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் டெஸ்ட் தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலர் என்ற பெருமையும் பெற்றிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் மற்றும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பவுலிங் ஆவரேஜ் உடன் 200 விக்கெட்டை எடுத்த வீரர் என்ற சாதனையும் பும்ரா படைத்தார்.
2024 -ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் நாயகன் விருதை கைப்பற்றினார். கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?