விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! - துணை முதல்வர் கொடுத்த ஹாட் அப்டேட்

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கருணாநிதிக்கு இருந்த அனைத்து போர் குணங்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Oct 19, 2024 - 18:24
 0
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! - துணை முதல்வர் கொடுத்த ஹாட் அப்டேட்
விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! - துணை முதல்வர் கொடுத்த ஹாட் அப்டேட்

திருவண்ணாமலையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (அக். 19) நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் பெய்த கனமழையின்போது நமது தமிழக அரசு மக்களோடு மக்களாக நின்றது. இந்த மழையில் மக்களும் நம்முடைய அரசுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்தனர். இன்றைக்கு சென்னையில் பெய்த மழையில் வட சென்னையில் 30 சென்டிமீட்டர் மழையானது பெய்துள்ளது. மழை பெய்த ஓரிரு நாட்களிலேயே மழை பெய்ததற்கான சுவடுகள் இல்லாமல் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கடந்த நான்கு மாதங்களாக ஆய்வுகள் நடத்தி இன்றைக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழையின் வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றியதற்கு காரணம் தமிழக முதல்வரும் திராவிட ஆட்சியும்தான். இதற்கு என்னுடன் தோளோடு தோள் நின்று ஒரு வழிகாட்டியாகவும் அறிவுரை வழங்கியதும் அமைச்சர் ஏவா வேலுதான். இதற்காக நான் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெரு மழையை வென்ற மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் நான் உங்களை காண வந்துள்ளேன். அடுத்து வரும் மழை நாட்களிலும் மக்களை காக்கின்ற பணி தொடரும் என்பதனை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை பிப்ரவரி மாதம் மதுரையில் தொடங்கி வைத்தோம். 12,500 கிராம பஞ்சாயத்துகளுக்கு 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளோம், இதுவரையில் தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியுள்ளோம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பவித்திரா வருகை தந்துள்ளார். திருவண்ணாமலை வீரர் யுவராஜ் வருகை தந்துள்ளார். பவித்ரா மற்றும் யுவராஜ் ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க துடிக்கும் இவர்களை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள். சென்ற முறை முதலமைச்சர் விளையாட்டு கோப்பையில் 5 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 11 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் விளையாட்டு கோப்பைக்கு தமிழக முதல்வர் 86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 37 கோடி ரூபாய் அதிகரித்து தமிழக முதல்வர் கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் விளையாட்டுப் போட்டிக்கு இந்த அளவிற்கு பரிசு தொகை கொடுக்கப்படுகிறது என்றால் அது தமிழகத்தில் மட்டும்தான். விளையாட்டுப் போட்டிகளை உற்சாகப்படுத்துவதற்காக திராவிட மாடல அரசு பல்வேறு வகையில் உதவிகள் செய்து வருகிறது. 1300 வீரர்களுக்கு 38 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை சட்டமன்றத்தில் கூறியுள்ளோம். முதல் கட்டமாக நூறு விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு பணி வழங்கப்பட உள்ளது. 

பாரீசில் நடைபெற்ற பேரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு வீரர்களை அனுப்பி வைத்தோம். இவர்கள் செல்வதற்கு முன்பாகவே முதல்வர் விளையாட்டு வீரர்களை அழைத்து பயிற்சி எடுப்பதற்காக ஏழு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார். ஆறு வீரர்களில் நான்கு வீரர்கள் பதக்கத்துடன் திரும்பி வந்தனர். ஒரு சில்வர் மூன்று வெண்கலப் பதக்கங்கள் வென்று திரும்பி வந்த வீரர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் பரிசு தொகை வழங்கினார். ஏழை எளிய ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கு நமது தமிழ்நாடு சேம்பியன்ஷிப் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறோம். இந்த அறக்கட்டளை மூலம் நிதியுதவி பெற விரும்பும் வீரர்கள் யாராக இருந்தாலும் NCF இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த அறக்கட்டளை தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே 513 வீரர்களுக்கு பத்து கோடி ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கியுள்ளோம். 

விளையாட்டுத் துறைகளில் மட்டுமல்லாமல் நம்முடைய திராவிட மாடல் அரசு அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகிறது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம், வேலை வாய்ப்பு, மகளிர் நலன் உட்பட 13 துறைகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது என மத்திய அரசு நிதி அயோத் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. 530 கோடி பயணிகள் இலவச மகளிர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். காலை உணவு திட்டத்தினை தமிழக முதல்வர் அறிமுகம் செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர். முதன்மை பெண் திட்டத்தில் மூன்று லட்சம் மாணவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார்கள். தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். 

இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் தமிழகம் தான்! விளையாட்டுத் துறையை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைஞர்தான். எப்போதும் யாராலும் அரசியலில் வீழ்த்த முடியாத வீரராக கருணாநிதி, வாழ்நாள் முழுவதும் திகழ்கின்றார். விளையாட்டு உபகரணங்களை பெறக்கூடிய வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கருணாநிதிக்கு இருந்த அனைத்து போர் குணங்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow