டைம் டிராவல் 2024: உலகளவில் விளையாட்டில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..

டி20 சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா.., சர்ச்சைகளை கடந்து சரித்திரம் படைத்த பாரிஸ் ஒலிம்பிக்.., டென்னிஸ் ஜாம்பவான் நடால் ஓய்வு.., இப்படி இன்னும் 2024ல் அரங்கேறிய பல விளையாட்டு சுவாரஸ்யங்களை இப்போது பார்க்கலாம்....

Dec 31, 2024 - 22:00
Dec 31, 2024 - 22:36
 0
டைம் டிராவல் 2024: உலகளவில் விளையாட்டில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள்..

1.    2024 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் வெற்றி பெற்றனர். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகன் போபண்ணா. 

2.    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ரிட் பயணித்த போது விமானத்தில் நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்த சம்பவம், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

3.    பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றில், இந்திய மகளிர் அணி 3-2 என்ற அளவில் தாய்லாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்ற தாய்லாந்திற்கு எதிராக, பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணியின் இளம் குழு, அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி வெற்றிப் பெற்றது.

4.    பிரான்ஸ் அணியின் மிட்பீல்டர் பால் போக்பா, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக கால்பந்து விளையாட்டில் இருந்து நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்.
 
5.    2024ம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில், மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 42வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.

6.    அல்பெனியாவில் நடைபெற்ற World Rapid and blitz cadet chess போட்டியில், 43 நாடுகளைச் சேர்ந்த 375 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் அரியலூரைச் சேர்ந்த ஷர்வானிக்கா, 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான துரித செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

7.    போலாந்தில் நடைபெற்ற சூப்பர் பெட் ராபிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் தொடரில், உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேவின் கார்ல்சனை, தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்தார்.

8.    ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா அணி. இதன்மூலம் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கெத்து காட்டியது.

9.    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான், மேற்கு வங்கத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கினார். முதல் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த யூசுப் பதான், 5 முறை எம்பியாக வலம் வந்த காங்கிரஸ் கட்சியின் அதிர் ரஞ்சன் சவுத்ரி என்பவரை எதிர்த்து போட்டியிட்டு அபராமாக வெற்றிப் பெற்றார்.

10.    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஓற்றையர் பிரிவின் சாம்பியன் பட்டத்தை போலாந்து வீராங்கனை ஸ்வியாடென் வென்றார். இதன்மூலம் 4வது முறையாக தொடர்ந்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ஸ்வியாடென்.

11.    2024 ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வென்றார்.

12.    பிரபல கோபா-அமெரிக்கா கோப்பைக்கான கால்பந்து இறுதிப் போட்டியில், கொலம்பியாவை 1 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா அணி. உலகக் கோப்பையை தொடர்ந்து, கோபா-அமெரிக்கா கோப்பையையும் அர்ஜெண்டினா அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

13.    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ரஷித் கான் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி, அரையிறுதி வரை முன்னேறி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

14.    ஜூன் 29ம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.  

15.    டி20 உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை அடுத்து, விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

16.    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து, ராகுல் டிராவிட் விடை பெற்றார். இந்திய அணியை டி20 சாம்பியனாக்கிய பெருமையுடன், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.

17.    லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில், ஜாம்பவான் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி, ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற அல்காரஸ், தொடர்ந்து 2வது முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் வென்று அசத்தினார்.   

18.    ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில், ஸ்பெயின் அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.  

19.    ஜூலை 9ம் தேதி, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக, கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். ஐபிஎல் அணியான கொல்கத்தா ரைடர்ஸ்-க்கு பயிற்சியாளராக இருந்த கவுதம் கம்பீர், முதன்முறையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

20.    பாரிஸ் ஒலிம்பிக் தொடர், ஜூலை 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பாரிஸ் செய்ன் ஆற்றில் நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்ச்சியில், ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற நாடுகளின் படகு அணிவகுப்புகள் நடப்பட்டன. அப்போது மழை கொட்டத் தொடங்கியதால், வீரர்கள் அனைவரும் நனைந்தபடி சென்றது சர்ச்சையானது.

21.    பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2 முறை சாம்பியனான ரஃபேல் நடால், அதிர்ச்சித் தோல்வியை தழுவினார். பாரிஸ் நகரில் இதே களிமண் தரை மைதானத்தில் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை நடால் வென்றிருந்தார்.

22.    2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக தோல்வியடைந்ததை அடுத்து, இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

23.    பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆடிய இந்திய அணி, 2 க்கு1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்று சாதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

24.    இந்திய ஹாக்கி அணியின் வெற்றிக்கு பெரும் பலமாக இருந்த, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வுப் பெற்றார். கேரளாவைச் சேர்ந்த அவருக்கு இந்திய ஹாக்கி அணி வீரர்களும் ரசிகர்களும் பிரியா விடை கொடுத்தனர்.

25.    நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, பிரிட்டனைச் சேர்ந்த பாடகியான ஜாஸ்மின் வாலியாவை காதலிப்பதாக வெளியான தகவல் சர்ச்சையானது.

26.    பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் ஒரு ஆண் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் இமான் கெலிஃப்க்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் ஆண் என நிரூபிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

27.    ஒலிம்பிக் தொடரில், 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான போட்டியில், துருக்கி அணி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது. துருக்கி வீரர் யூசுப் டிகெக் துப்பாக்கிச் சுடுதலில் கவனத்தை சிதறடிக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தும் எந்த டெக்னாலஜியையும் பயன்படுத்தாமல், ஸ்டைலாக சுட்டது, சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலானது.

28.    பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், மல்யுத்த விளையாட்டில் மகளிர் 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட். இறுதிப் போட்டிக்கு தேர்வான பின்னரும் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையானது.

29.    பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற 4வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். இருப்பினும் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமிடம் தங்கப் பதக்கத்தை பறிகொடுத்தது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

30.    பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுத் தொடர், ஆகஸ்ட் 12ம் தேதி வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது. ஜூலை 26ம் தேதி தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்கில், 26 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

31.    இந்திய கிரிக்கெட் ஷிகர் தவான், ஆகஸ்ட் 24ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தனது 38 வயதில் ஓய்வை அறிவித்த அவர், இந்திய அணியின் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட்டவர்.

32.    முன்னாள் டபுள்யூ.டபுள்யூ.ஈ (WWE) சாம்பியன் சிட் விசியஸ், ஆகஸ்ட் 27ம் தேதி காலமானார். அவரது மறைவு WWE ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 63 வயதான சிட் விசியஸ், பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனுடன் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

33.    17 வது பாராலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஆகஸ்ட் 29ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இந்த பாராலிம்பிக் தொடரின் ஜோதியை பிரபல நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார்.

34.    ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ம் தேதிகளில், சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்றது. தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் நடைபெற்றது, உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

35.    இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஞ்ரங் புனியா இருவரும் அரசியலில் அடியெடுத்து வைத்தனர்.

36.    செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற 2024 அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ்க்கு எதிராக விளையாடி, 6 - 3, 6 - 4, 7 - 5 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்றார். முன்னதாக 2024 ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் வென்று இருந்தார் ஜானிக் சின்னர்.

37.    பாராலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில், தமிழக வீராங்கனை துளசி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அதேபோல், மற்றொரு தமிழக வீராங்கனை மனிஷா ராமதாஸ், டென்மார்க் வீராங்கனை கேத்தரினை வீழ்த்தி வென்கல பதக்கம் வென்றார்.

38.    பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாரா ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார் மாரியப்பன்.

39.    பாராலிம்பிக் போட்டியில், சீனா 220 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது. கிரேட் பிரிட்டன் 124 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், அமெரிக்கா 15 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

40.    பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் ஒட்டுமொத்தமாக 29 பதக்கங்களை வென்று அசத்தினர். மேலும், பதக்கப் பட்டியலில் இந்தியா 18-வது இடத்துக்கும் முன்னேறியது. பாராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இதுவே இந்தியாவின் சிறந்த இடமாகும்.

41.    உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமூக வலைதள கணக்குகளை, மொத்தமாக 100 கோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். முன்னதாக ரொனால்டோ தொடங்கிய யூடியூப் சேனலை, 6 கோடி ரசிகர்கள் பின்தொடர்ந்தனர்.

42.    செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்ற டைமண்ட் லீக் விளையாட்டுத் தொடரில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாவது இடத்தை பிடித்தார். வெறும் ஒரு சென்டிமீட்டர் வித்தியாசத்தில் அவர் முதல் இடத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

43.    செப்டம்பர் 17ம் தேதி, ஷாங்காய் நகரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில், சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி. இதன் மூலம் ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் ட்ராபியில் தங்கம் வென்று இந்தியா ஹாக்கி அணி வரலாறு படைத்தது.  

44.    செப்டம்பரில், ஷார்ஜாவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை, ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றி சாதனை படைத்தது.

45.    45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, செப்டம்பர் 10 முதல் 22ம் தேதி ஹங்கேரியில் உள்ள புத்தபெஸ்ட் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 21 / 22 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. கடந்தாண்டு சென்னையில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியா வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

46.    அக்டோபர் 4ம் தேதி, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் திருமணம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் ரஷித் கான் உட்பட அவரது மூன்று சகோதரர்களுக்கும் பாஸ்துன் முறைப்படி திருமணம் நடந்தது.

47.    அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணி, 27 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இராணி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.

48.    டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் விளையாடிய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்-க்கு, தெலங்கானா அரசு டிஎஸ்பி பதவி வழங்கி கெளரவித்தது.

49.    நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 69 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து. மேலும், இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆறாவது அணி என்ற பெருமையும் நியூசிலாந்துக்கு கிடைத்தது.

50.    2024 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஆர் விருது, மான்செஸ்டர் சிட்டி கிளப் அணிக்காக விளையாடும், ஸ்பெயின் அணியின் மிட் ஃபீல்டர் ரோட்ரிக்கு வழங்கப்பட்டது. அதேநேரம், ரியல் மேட்ரிட் அணியின் வினிஷியஸ் ஜூனியருக்கு இந்த விருது வழங்கப்படாதது மிகப்பெரிய சர்ச்சையானது.

51.    குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன், சுமார் 19 ஆண்டுகளுக்கு பின்னர் ஜேக் பால் என்ற 27 வயது குத்துச்சண்டை வீரருக்கு எதிராக தொழில்முறை போட்டியில் பங்கேற்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், நவம்பர் 16ம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில், எட்டு சுற்றுகளின் முடிவில் ஜேக் பால் புள்ளிகள் அடிப்படையில் மைக் டைசைனை வீழ்த்தினார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரலை செய்யப்பட்ட இப்போட்டியை, கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.

52.    நவம்பர் 18ம் தேதி, அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த காசிமா மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்தார். சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வீராங்கனை காசிமாவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பதோடு, அவரும் கேரம் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

53.    ஸ்பெயின் நாட்டின் பிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், டேவிஸ் கோப்பை தொடருடன் விடை பெற்றார். ரோஜர் ஃபெடாரை தொடர்ந்து ரஃபேல் நடாலும் டென்னிஸில் இருந்து ஓய்வுப் பெற்றதால், ரசிகர்கள் சோகத்தில் உறைந்தனர். களிமண் தரை போட்டிகளில் மன்னாதி மன்னான ரஃபேல் நடால், 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர்.

54.    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன், தனது காயத்திலிருந்து குணமடைந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 2 அரை சதம் அடித்ததோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 9,000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

55.    வரும் ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. கடந்த தொடரில் தனது கேப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்த தோனி, இனிமேல் ஐபிஎல்லில் விளையாடமாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால், தோனி கண்டிப்பாக விளையாடுவார் எனத் தெரிகிறது.

56.    ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த மெகா ஏலத்தில் இந்திய அணியின் ரிஷப் பண்ட்-ஐ, 27 கோடி ரூபாய்க்கு வாங்கி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது லக்னோ அணி. ஐபிஎல் வரலாற்றில், இதுதான் அதிக விலைக்கு ஒரு வீரர் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

57.    டிசம்பர் 1ம் தேதி ஐசிசி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார் ஜெய்ஷா. ஆறு ஆண்டுகள் வரை இந்தப் பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 36 வயதான ஜெய்ஷா எந்தவித போட்டியும் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

58.    துபாயில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் அணி சாதனை படைத்தது. இதன்மூலமாக தொடர்ந்து இரண்டு முறை ஆசியக் கோப்பையை கைப்பற்றி வங்கதேசம் அணி புதிய வரலாறு படைத்தது.

59.    2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை, சவுதி அரேபியா நடத்தும் என்று ஃபிபா தலைவர் ஜியானி இன்பானிட்டோ டிச 12ம் தேதி அறிவித்தார். இது சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரை கத்தார் நாடு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

60.    சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை, தமிழக வீரரான குகேஷ் வென்று புதிய சாதனை படைத்தார். இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பின்னர் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்தார்,

61.    சாம்பியன்ஸ் கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடரை பாகிஸ்தான் நடத்துவதில் ஏற்பட்ட குழப்பம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி, பாகிஸ்தான் சென்று விளையாடமாட்டோம் எனக் கூறியதால், பாகிஸ்தானும் இனி இந்தியா வந்து விளையாட முடியாது என அறிவித்தது. இதனையடுத்து 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரை, இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நடத்தும் தொடரில் இரு அணிகளும் ஹைபிரிட் மாடல் முறைப்படி, பொதுவான ஒரு நாட்டில் விளையாட முடிவு செய்துள்ளது.

62.    கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா நடத்திவரும் நிறுவனத்தில், ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடன்ட் ஃபண்ட் பணத்தை பி.எஃப் அமைப்புக்கு செலுத்தவில்லை என தெரிய வந்தது. இதைனையடுத்து அவர் கைது செய்யப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

63.    2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில், இந்திய அணிக்கு இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று கொடுத்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் பெயர் கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் கொடுத்த விளையாட்டுத் துறை அமைச்சகம், மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படும் என கூறியிருந்தது.

64.    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சவுதி, இங்கிலாந்துக்கு எதிராக தனது கடைசி தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போதே ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நியூசிலாந்து பவுலர் போன்ற பல சாதனைகளுக்கு சொந்தகாரர் டிம் சவுதி.

65.    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் அஸ்வின், தனது ஓய்வை அறிவித்தார். பார்டர்-கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி முடியும் போதே ஓய்வை அறிவித்தது, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

66.    பிரபல கிரிக்கெட் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்பிளி, டிசம்பர் இறுதியில் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வினோத் காம்பிளிக்கு சிறுநீர் தொற்று இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

67.    இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமணம், டிசம்பர் 22ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. பிவி சிந்துவின் கணவர் வெங்கட்டா தத்தா சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித், ஷாலினி தம்பதியினர் பங்கேற்றிருந்தனர்.

68.    மகளிர் கிரிக்கெட்டில், 2024ம் ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. அதன்படி, அவர் இந்தாண்டு மொத்தம் ஆயிரத்து 602 ரன்கள் குவித்துள்ளார். மேலும், தொடர்ந்து ஐந்து சர்வதேச போட்டிகளில் 50 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

69.    சர்வதேச கால்பந்து சங்கம் (ஃபிஃபா - FIFA) சார்பில், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது வினிசியஸ் ஜூனியருக்கு வழங்கப்பட்டது. பிரேசில் வீரரான இவர், ரியல் மாட்ரிட் கிளப்புக்காகவும் ஆடி வருகிறார். 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதை பெற்ற முதல் பிரேசில் வீரர் என்ற பெருமையை 24 வயது வினிசியஸ் ஜூனியருக்கு கிடைத்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow