டிரம்ப் குழுவில் இந்திய வம்சாவளி.. ஏஐ துறை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவிப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அதிபர் டொனால்ட் டிரம், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Dec 23, 2024 - 13:16
 0
டிரம்ப் குழுவில் இந்திய வம்சாவளி.. ஏஐ துறை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் அறிவிப்பு
ஸ்ரீராம் கிருஷ்ணன் -டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர்.  இதில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். 

இதற்கிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள செயலாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் அரசாங்கத் திறன் துறையை வழிநடத்துவார்கள் என்று தெரிவித்தார். மேலும், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ - FBI) இயக்குநராக  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலையும், உளவுத்துறை இயக்குநராக துளசி கப்பார்டையும் தேர்வு செய்தார்.

இந்நிலையில் தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அதிபர் டொனால்ட் டிரம், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறை கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்றும் ஏஐ, கிரிப்டோ துறை தலைவராக செயல்படும் டேவிட் ஓ சாக்ஸுடன் இணைந்து அவர் பணிபுரிவார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 

புதிய பதவி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்ரீரம் கிருஷ்ணன், “ஏஐ துறையில் அமெரிக்காவை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை உறுதி செய்து, நாட்டிற்கு சேவையாற்ற இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

சென்னையை பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீராம் கிருஷ்ணன் கடந்த 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்.  இவர் மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாஹு, பேஸ்புக், ஸ்நாப் போன்ற நிறுவனங்களில் பணிப்புரிந்துள்ளார். இவர் 2022-ஆம் ஆண்டு எலான் மஸ்க் ‘டுவிட்டரை’ விலைக்கு வாங்கிய பிறகு அதை மறுசீரமைப்பு செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow