உருவ கேலி செய்ததால் நடந்த விபரீதம்.. பள்ளி நண்பரை ஒரே குத்தில் கொன்ற இளைஞர்
உருவ கேலி செய்ததால் பள்ளி நண்பரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த அருண் தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தார். நீலாங்கரையைச் சேர்ந்த விநாயகமும் இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அருண் சபரிமலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் வீட்டில் பூஜையை முடித்துவிட்டு தனது நண்பர் விநாயகத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது, அருணும் விநாயகமும் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகிறது.
மதுபோதையில் அருண், விநாயகம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் அருண், விநாயகத்தை 4 முறை குத்தியதாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் விநாயகம் அருணை முகத்தில் குத்தியதாக தெரிகிறது. ஒரே குத்தில் அருண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். விநாயகம் போதையில் அங்கிருந்து சென்று விட்டார். இதன்பிறகு அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மயங்கி கிடந்த அருணை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது. மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கும் இதே பதிலை கூறியதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு 108 ஆம்புலன்ஸை அழைத்தனர். ஆனால், 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றி செல்ல முடியாது என கூறியதால் பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அருணை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அருணை கொண்டு வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி தோழரான நண்பர் விநாயகம் என்பவர் தாக்கியதில் அருண் இறந்து போனது தெரிய வந்தது. அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
இதையடுத்து விநாயகத்தை நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து துரைப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், கொல்லப்பட்ட அருண் கைதான விநாயகத்தை "பல்லு பல்லு" என கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் அருண் கிண்டல் செய்ததால் விநாயகம் ஒரே குத்தில் அவரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அருணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?