நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

Jan 8, 2025 - 14:49
 0
நயன்தாரா திருமண ஆவணப்பட விவகாரம்.. வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் மீதான வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.  தயாரிப்பு நிறுவனத்தின் அனுமதியின்றி படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 

இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழ்நிலையில் நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம்,  வழக்கை தாக்கல் செய்ய வொண்டர் பார் நிர்வணத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்கான 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தனுஷ் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதிலளிக்கும்படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்,  நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு,  தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,  இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், அன்றைய தினம் உள்ள அனைத்து இடைக்கால மனுக்கள் மீதான விசாரணையையும் ஒத்தி வைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow