பாமக தொடர்ந்த வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு
ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்து, விதிமீறலில் ஈடுபட்ட சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, ‘யார் அந்த சார்’ என பல கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்க திமுக முயல்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தராஜன், குஷ்பு உட்பட பலர் குற்றம்சாட்டினர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பாஜக மகளிர் அணி சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல கட்சி தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விண்ணப்பித்த போது ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்நிலையில், சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். போராட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறி எதிர்க்கட்சியினருக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையினர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விண்ணப்பம் பெறாமலே ஆளுங்கட்சியினர் போராட்டத்தை அனுமதித்துள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போராட்டங்களுக்கு ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சென்னை நகர போலீஸ் சட்ட விதியை மீறி செயல்பட்ட சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை ஜனவரி 10-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?