திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு வரும் 10-ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் மூன்று நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலை வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று காலை முதலே டிக்கெட் கவுண்டரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததாக கூறப்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சேலத்தைச் சேர்ந்த மல்லிகா மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலாவும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்து பேரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருமலை ஸ்ரீவாரி வைகுண்ட துவாராவைத் தரிசிக்க இலவச டோக்கன்களுக்காக, திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பல பக்தர்கள் பலியானது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டோக்கன்களுக்காக பக்தர்கள் அதிகளவில் கூடியிருந்த நேரத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், என்னை மிகவும் பாதித்திருக்கிறது.
மேலும் படிக்க: எதிர்க்கட்சிகளின் குரல் வலைகள் ஏன் நசுக்கப்படுகிறது..? என்ன ஜனநாயக ஆட்சி நடக்கிறது..? தமிழிசை
அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றவும் உத்தரவிட்டுள்ளேன். நான் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், தேவஸ்தான அதிகாரிகளுடன் பேசி, நிலைமையை கவனித்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக்கத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?