டைம் டிராவல் 2024.. இந்தியாவில் நடந்த 50 முக்கிய நிகழ்வுகள்..

நாடையே திருப்பிப்போட்ட வன்முறைகள், அரசியல் இறப்புகள், ரயில் விபத்துகள், உயிரிழப்புகள், சர்ச்சை சட்டங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் என பல சம்பவங்கள் இந்த ஆண்டில் நடைபெற்றது.. 2024ல் நாடு கண்ட வரலாற்று நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

Dec 31, 2024 - 20:00
Dec 31, 2024 - 17:50
 0
டைம் டிராவல் 2024.. இந்தியாவில் நடந்த 50 முக்கிய நிகழ்வுகள்..

1. ஜனவரி 3ம் தேதி 2005ம் ஆண்டில் ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்து 14 பேர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு மரண தண்டனையை வழங்கி உத்தரபிரதேசத்தின் ஜாவுன்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

2. ஜனவரி 6ம் தேதி அன்று சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கான ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் - 1’ எனப்படும் எல்1 பகுதியை அடைந்து வரலாற்று சாதனை படைத்தது.

3. ஜனவரி 7ம் தேதி, தனது லட்சத்தீவு பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டதையடுத்து, அவரை குறித்தும்,இந்திய மக்கள் குறித்து மாலத்தீவின் துணை அமைச்சர்கள்  மரியம் ஷியுனா, மால்ஷா ஷெரீஃப், மாஜூம் மஜித் அவதூறாரக கருத்து தெரிவித்திருந்தனர் . இதனால், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என இந்தியர்கள் ஆன்லைனில் கண்டனங்கள் தெரிவித்ததால், அந்த 3 துணை அமைச்சர்களையும் தற்காலிக பதவி நீக்கம் செய்தது மாலத்தீவு அரசு.

4. ஜனவரி 12ம் தேதி அன்று, மும்பையில் கட்டப்பட்ட இந்தியாவிலேயே மிக நீண்ட கடல் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். சுமார் 22கிமீ நீளமுள்ள இந்த பாலம் மும்பை நகரில் இருந்து ராய்காட் மாவட்டத்தில் உள்ள நவி மும்பையை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

5. ஜனவரி 22ம் தேதி உத்தரபிரதேசம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை பிரான பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார் பிரதமர் மோடி.இந்த நிகழ்வுக்காக 11 நாட்கள் விரதமிருதார் பிரதமர் மோடி.

6. ஜனவரி 26ம் தேதியன்று நடந்த இந்தியாவின் 75வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மோர்கன். 

7. ஜனவரி 31ம் தேதி நில மோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.  இதன்மூலம், ஜார்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருக்க்கும் ஒருவர் கைதாவது இது 3வது முறையாகும். சோரனுக்கு முன் அவரது தந்தை ஷிபு சோரன் மற்றும் மது கோடா ஆகியோர முதலமைச்சர்களாக இருக்கும் போது கைதாகினர்.

8. பிப்ரவரி 6ம் தேதி இந்தியாவிலேயே முதல்முறையாக உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா  தாக்கல் செய்யப்பட்டது.  பல மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வந்த நிலையில், இச்சட்டத்தை உத்தரகாண்ட்டில் அமல்படுத்தியே தீருவேன் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தீர்க்கமாக இருந்தார்.

9. பிப்ரவரி 17ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் மூலம் இன்சாட் 3டிs செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.  இது, ஓசோன் படலத்தை ஆய்வு செய்வது, புவி வெப்பநிலை ஆகியவையை துல்லியமாக கணக்கிடும்.

10. மார்ச் 1ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் 3 உணவக ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்தனர்.

11. மார்ச் 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவை தேர்தல் தேவி அறிவிக்கப்பட இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்தது எதிர்க்கட்சிகளிடையே சந்தேகத்தை எழுப்பியது. ஓய்வுபெற்ற பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர் 2022ம் ஆண்டில் தேர்தல் ஆணயராக பதவியேற்றார்.

12. மார்ச் 11ம் தேதி சிறுபாண்மையினருக்கு தீங்கு விளைவிப்பதாக எதிர்க்கப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதன்மூலம், வங்கதேசம், பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பர் 31ம் தேதிக்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை சட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

13. மார்ச் 21ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது.திகார் சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு உச்சநீதிமன்றம் பல நிபந்தனைகளோடு இடைக்கால ஜாமின் வழங்கியது. 

14. மே 1ம் தேதி டெல்லியில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரே நாளில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஐபி அட்ரஸ்சை வைத்து விசாரணை மேற்கொண்டதில் இந்த இ-மெயில்கள் ரஷ்யாவில் இருந்து வந்திருக்கலாம் என முதற்கட்டமாக தெரியவந்தது.

15. மே 13ம் தேதி பாஜக மூத்த தலைவரும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி தனது 72வது வயதில் காலமானார். இவர் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் காலமானார்.

16. மே 30ம் தேது ஜம்மு காஷ்மீரில் இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், 21 பேர் உயிரிழந்தனர் மற்றும் 35 பேர் காயமடைந்தனர்.

17. மே 31ம் தேதி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். ஜெர்மணியில் இருந்து கர்நாடக திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, பெங்களூரு விமானநிலையத்தில் வைத்து நள்ளிரவு 12.52 மணியளவில் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப் கைது செய்தனர்

18. ஜூன் 4ம் தேதி வெளியான நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகளில் 67 பேர் முதலிடம் பிடித்தால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது என தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

19. ஜூன் 12ம் தேதி ரஷ்ய ராணுவத்தில் இருந்த இந்திய வீரர்களை விடுவிக்குமாறு ரஷ்யாவுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடிதம் எழுதியது. உக்ரைன் உடனான போரில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

20. ஜூன் 17ம் தேதி மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சஞங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர நிகழ்வில் 60 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

21. ஜூன் 19ம் தேதி  மோசடிகள் நடந்திருப்பதாக கூறி நெட் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம்  ரத்து செய்தது. இதனால் நெட் தேர்வை எழுதிய மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாக வருத்தம் தெரிவித்தனர்.

22. ஜூன் 22ம் தேதி நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத் சிங் குமாரை அந்த பொறுப்பில் இருந்து மத்திய அரசு நீக்கியது.

23. ஜூன் 28ம் தேதி டெல்லி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் உள்ள் மேற்கூரை கனமழை காரணமாக இடிந்து விழுந்ததால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.

24. ஜூலை 1ம் தேதி இந்திய குற்றவியல் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா, பாரதிய சாக்‌ஷியா ஆகிய புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன.

25. ஜூலை 2ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மதவழிப்பாட்டு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.

26. ஜூலை 8ம் தேதி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான பிறகு  வன்முறை வெடித்த மணிப்பூருக்கு முதல்முறையாக சென்றார் ராகுல்காந்தி.  அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேசினார்.


27. ஜூலை 8ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி. அப்போது பிரதமர் மோடிக்கு டாச்சாவில் ரஷ்ய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார். மிகவும் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த டாச்சாவில் விருந்தளிக்கும் வழக்கத்தை புதின் கொண்டிருக்கிறார்.

28.  ஜூலை 18ம் தேதி உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 31 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

29. ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டையும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்தார்.

30. ஜூலை 26ம் தேதி அசாம் மாநிலத்தை சேர்ந்த அஹோம் வம்சத்தின் 700 ஆண்டுகள் பழமையான புதைமேடுகளை 43வது உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது யுனஸ்கோ. இந்த புதைமேடுகள் அஹோம் வம்சத்தின் மன்னர்கள், மகாராணிகள், பிரபுக்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட இடமாகும்.

31. ஜூலை 30ம் தேதி கேரளவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதிகளை அதிபயங்கர நிலச்சரிவு உலுக்கிப்போட்டது. இந்த  சம்பவத்தில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேர்ந்தது.

32. ஜூலை 30ம் தேதி ஜார்க்கண்டின் ராஜ்கர்சவான் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், அதன் மீது அவ்வழியே வந்த மும்பை-ஹவுரா பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


33. ஆகஸ்ட் 8ம் தேதி மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வந்த பெண் பயிற்சி மருத்துவர் பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு   கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ந்து போக வைத்தது. இதனால் சக மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

34. ஆகஸ்ட் 21ம் தேதி அன்று வினாத்தாள் கசிவின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நெட் தேர்வு மீண்டும் தொடங்கியது. செப்டம்பர் 5ம் தேதி வரை கணினி வழியில் நடந்த இந்த தேர்வை சுமார் 6.84 லட்சம் பேர் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

35. ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைனின் கீவ் நகருக்கு அரசு பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அப்போது அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆரத்தழுவிய அவர், போரால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு இரங்கலும் தெரிவித்தார். 

36. செப்டம்பர் 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தன்னுடைய 72வது வயதில் காலமானார். சிலகாலமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

37. அக்டோபர் 9ம் தேதி பிரபல இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.  இவருக்கு மகாராஷ்டிரா அரசு சார்பில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.

38. அக்டோபர் 12ம் தேதி அன்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக்  சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பபத்தில் சித்திக் மீது மொத்தம் 5 தோட்டாகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

39. அக்டோபர் 28ம் தேதி அன்று குஜராத்தின் வதோதராவில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாடா நிறுவனத்துக்கு சொந்தமான இந்த நிலையத்தில் ராணுவத்துக்கு வேண்டிய சி-295 ரக போர் விமானம் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

40. நவம்பர் 11ம் தேதி, உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2025ம் ஆண்டு மே 13ம் தேதி வரை நீடிக்கும்.

41. நவம்பர் 13ம் தேதி அன்று, உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றம்செய்பவர்களின் வீடுகளை ‘புல்டோசர் நடவடிக்கை’ என்ற பெயரில் இடிக்கும் செயலுக்கு  தடை விதித்தது உச்சநீதிமன்றம். குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்  என்பதற்காக ஒருவருடைய வீட்டையோ அல்லது அவருக்கு சொந்தமான கட்டடங்களையோ இடிப்பது சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


42. நவம்பர் 16ம் தேதி அன்று நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை 1,500 கிமீ தொலைவுக்கும் அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

43. நவம்பர் 21ம் தேதி அன்று இந்திய தொழிலதிபர் கவுதம் அதானிக்கு அமெரிக்காவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் சில ஒப்பந்தங்களை கைபற்ற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் பெற்றதாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

44. நவம்பர் 25ம் தேதி உத்தரபிரதேசத்தின் பரேலியில் கூகுள் மேப்ஸ் தவறாக வழிகாட்டியதால் உடைந்த பாலத்தின் மேலிருந்து காரோடு கழிந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால், பொதுப்பணித் துறையை சேர்ந்த 2 பொறியாளர்களையும், கூகுள் மேப் நிறுவனத்தின் பிரதிநிதியையும் விசாரணைக்கு வரும்படி போலீசார் தெரிவித்திருந்தனர்.

45. டிசம்பர் 3ம் தேதி அசாம் மாநிலத்தில் உணவகங்கள், விடுதிகள், பொது இடங்களில் மாட்டிறைச்சி சமைப்பதற்கும் உண்பதற்கும் தடை விதித்து பாஜகவை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். இந்த தடையை மீறுபவர்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

46. டிசம்பர் 10ம் தேதி கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். கடந்த 1999 முதல் 2004ம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.

47. டிசம்பர் 11ம் தேதி, ரிசர்வ் வங்கியின் 26வது கவர்னராக சஞ்ஜய் மல்ஹோத்ரா  நியமிக்கப்பட்டார். இவர், 3 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

48. டிசம்பர் 12ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால், கங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

49. டிசம்பர் 16ம் தேதி டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்தார் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக. இச்சந்திப்புக்கு பிறகு, மீனவர்கள் பிரச்சனைக்கு நீடித்த நிலையான தீர்வை காண விரும்புகிறோம் என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக தெரிவித்திருந்தார்.

50. டிசம்பர் 16ம் தேதி யாசகம் பெறுபவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் யாசகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், யாராவது யாசகர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் ஆஷீஷ் சிங் அறிவித்திருந்தார்.

51. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தன்னுடைய 92வது வயதில் உயிரிழந்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow