துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசு பிரதிநிதி நீக்கம்..? யுஜிசி புதிய விதிமுறை
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம் பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் துணை வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர்.
இந்த குழு விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான மூன்று பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும், அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம்.
இந்த சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார். துணைவேந்தர் நியமனத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் என்ற நிலையில் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தயாரித்துள்ளது. அதில், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் தேடுதல் குழுவில் ஆளுநரால் நியமிக்கப்படுபவர் தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் அல்லது செனட் அமைப்பு சார்பில் ஒருவர் இடம் பெறுவார். இதோடு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரும் தேடுதல் குழுவில் இடம் பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் அரசு தரப்பில் இடம்பெறக்கூடிய பிரதிநிதி இடம்பெறுவாரா? என்பது தற்போது கேள்விக்குறியாக மாறி உள்ளது. மானிய குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், ஆளுநரால் நியமிக்கப்படுபவர் குழுவின் தலைவராக இருப்பார் என்றும், அதோடு பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் அல்லது செனட் அமைப்பு சார்பில் ஒருவரும், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினர் ஒருவரும் இடம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர சம்பந்தப்பட்ட மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதி குழுவில் இடம் பெறுவாரா என்பதை தெளிவாக குறிப்பிடவில்லை. இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
What's Your Reaction?