ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

ஆங்கில புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

Jan 1, 2025 - 12:46
Jan 1, 2025 - 13:39
 0
ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!
ஆங்கில புத்தாண்டு.. மதுரை கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை 4.30 மணி முதலே வருகை தருகின்றனர்.  2025ம் ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான, வளமான ஆண்டாக அமைய வேண்டும் என ஒவ்வொருவரும் மீனாட்சியம்மனை தரிசித்தனர்.

ஆங்கில புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளான இன்று மதுரை மட்டுமல்லாது தென்மாவட்ட மக்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர்.  மேலும் ஐயப்ப பக்தர்களும், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்வதற்காக வரிசை வரிசையாக காத்திருந்து உள்ளே சென்றனர்.

கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் காவல்துறையினரும் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் புத்தாண்டு தினத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டுச்சேலை சாத்தி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகிறனர்.

தொடர்ந்து புத்தாண்டை முன்னிட்டு அம்மன் சன்னதி முன்பு பூ அலங்காரத்தை பக்தர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நோய்நொடியற்ற வாழ்வையும், அளவற்ற மகிழ்வையும், வளமான ஆண்டாக 2025அமைய வேண்டும் என மீனாட்சியம்மனை பக்தர்கள் மனமுருக வழிபட்டு வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருவறையில் உள்ள மூலவர் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது.

இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

உற்சவர் சன்னதியில் உள்ள உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

இதனால் திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow