Sathuragiri Hills Temple Visit : சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி
Devotees Allowed To Sathuragiri Hills Temple Visit : ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 17) முதல் வருகிற 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Devotees Allowed To Sathuragiri Hills Temple Visit : மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ‘சதுரகிரி’ என அழைக்கப்படுகிறது. ஒட்டு மொத்த மலைகளின் அமைப்பு, சதுர வடிவில் இருப்பதாலும் இப்படி அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது. கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காகவும் தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என நம்பப்படுகிறது.
இக்கோயிலின் சுயம்பு மூர்த்தியான சிவபெருமான், சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். திருமணத்தடை நீங்கவும் , குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை வேண்டிச் செல்வது வழக்கம். மேலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோயில்(Arulmigu Chathuragiri Sundara Mahalingam Temple), தீராத நோய்களை தீர்க்கும் தலமாகக் கருதப்படுகிறது.
இக்கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி, தைப்பூசம், ஆடி அமாவாசை போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 17) முதல் வருகிற 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி(Sathuragiri Hills) சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு(Sathuragiri Hills) வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை (ஆகஸ்ட் 17) சனி பிரதோஷம் என்பதால் பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகம் இருக்கவுள்ளதால் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மலையேற அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக கனமழை பெய்தால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மலையேற சென்று சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.
What's Your Reaction?