கூட்டணியில் இருந்த COLD WAR.. சிபிஎம் எடுத்த தடாலடி முடிவு..திமுகவின் அழுத்தம் தான் காரணமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியிருந்தது திமுகவுடனான கூட்டணியில் புகைச்சலை கிளப்பியது. இந்நிலையில், அக்கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கே.பாலகிருஷ்ணனை மாற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

Jan 6, 2025 - 11:27
 0
கூட்டணியில் இருந்த COLD WAR.. சிபிஎம் எடுத்த தடாலடி முடிவு..திமுகவின் அழுத்தம் தான் காரணமா?

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு, திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்திருந்த நிலையில், இன்று முரசொலியில் வெளியான கட்டுரை கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது. அந்த கட்டுரையில், கே.பாலகிருஷ்ணனின் பேச்சு, 'தோழமைக்கு இது இலக்கணம் அல்ல என்றும், சதி கூட்டத்திற்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. தோழமையை சிதைக்கும் என்பதை பல்லாண்டு காலம் அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரை தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பவர் எதற்காக வீதியில் நின்று கேட்க வேண்டும்? என்று கட்டுரையில் கேள்வி எழுப்பிய நிலையில், திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்திற்கு தீனி போடத் தொடங்கி இருக்கிறார் கே.பாலகிருஷ்ணன் என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பிரச்சனை பூதாகரமாக திமுகவுடனான கூட்டணியை சிபிஎம் முறித்துக்கொள்ள போகிறதா என்ற கேள்விகள் நிலவிவருகிறது. 

இதற்கு ஏற்றார் போலவே, கடந்த ஆண்டு கடந்த ஆண்டில் நடந்த முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெடித்த போது தமிழக அரசை எதிர்த்து கண்டனம் தெரிவித்தது, ஆர்ப்பாட்டம் நடத்தியது என பல விஷயங்களை தொடர்ந்து சிபிஎம் செய்து வருவதால் திமுக தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு பக்கம், திமுக கூட்டணியில் இருந்து சிபிஎம் விலக திட்டமிட்டிருப்பதாகவும், அதனால் தான் தொடர் எதிர்ப்புகளை கிளப்பி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டாலும், இதெல்லாம் தொகுதி பங்கீட்டுக்காக அச்சாரம் தான் என கூறப்படுகிறது. அதாவது, வருகிற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் இருக்கும் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுகவே போட்டியிட திட்டம் தீட்டி வரும் நிலையில், மீதம் இருக்கும் 34 தொகுதிகளை கூட்டணி கட்சிகள் எப்படி பிரித்துக்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், கூட்டணி முறிவு பயத்தை காட்டி ஏற்கெனவே விசிக, கங்கிரஸ் கட்சிகள் திமுகவை நெறுக்கி வருவது போல, நாமும் செய்யலாம் என சிபிஎம் திட்டம் தீட்டியிருக்கலாம் என தெரிவிக்கிறார்கள் சில விவரப்புள்ளிகள்.

ஆனால், ஒருபுறம் சிபிஎம் இப்படி ஒரு திட்டத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏற்கெனவே தொகுதி பங்கீடு குறித்த தலைவலியில் திமுக இருப்பதால், தொடர் மோதல் போக்கை கொண்டிருக்கும் சிபிஎம் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கி வைப்பது குறித்து சிந்திக்க தொடங்கியிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 24வது மாநில மாநாட்டில், கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சிபிஎம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் கே.பாலகிருஷ்ணன் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகியிருப்பதன் பின்னணியில் வயது மூப்பு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், திமுகவின் அழுத்தம் தான் காரணமா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக உடன் மோதல் ஏற்பட்ட சமயத்தில், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை நீக்கியதை போல, சிபிஎம் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கே.பாலகிருஷ்ணனை மாற்றி இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow