வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை.... கி. வீரமணி கருத்து!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகி உள்ளதற்கு வாரிசு அரசியல் என்று சொல்வது அர்த்தமற்றது என திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

Sep 29, 2024 - 20:05
 0
வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை.... கி. வீரமணி கருத்து!
வாரிசு அரசியல் பேச்சுக்கே இடமில்லை.... கி. வீரமணி கருத்து

துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி உதயநிதி ஸ்டாலின் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் டி. ஆர்.பி.ராஜா, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் வீரமணி, “திமுக அரசின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராகி, அதில் குறுகிய காலத்திலேயே முத்திரை பதித்து சாதனைகளைச் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றுச் செயல்படுவார் என்று நமது 'திராவிட மாடல்' முதலமைச்சர் அறிவித்திருப்பது பாராட்டி வரவேற்கத்தக்க ஒன்று. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு ஆகும். இயக்கத்தில் அவர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை ஏற்ற பிறகு. தி.மு.க.வில் இளைஞர்களிடையே கொள்கைப் பாசறை அமைத்து, திராவிட இயக்கத்தின் வேர்களை அறிந்து, புரிந்துக்கொள்ளும் விழுதுகளாக அவர்களைப் பக்குவப்படுத்தும் பயனுறு பாராட்டத்தக்க பணியை
மேற்கொண்டார். 

அவரது தேர்தல் பிரச்சாரம், கடும் உழைப்பு, இயக்க முதியவர்களைக் கனிவோடு அவர் பெருமைப்படுத்துதல் போன்ற பல நல்ல பண்புகளால், அவர் நாளும் முதிர்ச்சிப் பெற்று வளர்ந்து கொண்டே இருக்கிறார். இளையவர்கள் மட்டுமல்ல, முதியவர்களும், பொதுவானவர்களும் அவரது செயல் திறன் - ஆற்றல் கண்டு வியக்கின்றனர். பொறாமைக்காரர்களைத் தவிர. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று, மேலும் மேலும் 'திராவிட மாடல்' ஆட்சியின் மாட்சியை வளர்ப்பார் என்பது உறுதி. திமுக என்ற பேரியக்கத்தினை நல்ல கொள்கை இயக்கமாகவே ஆக்கிடும் அடிப்படைப் பணி அவரது தனித்தன்மையாகட்டும்.

அவர் அடக்கத்துடன் பதவி ஏற்கும் முன் குறிப்பிட்டுள்ளபடி 'தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கொள்கைகளின் வழியே செயல்பட்டு, கடமையாற்றுவேன் என்ற உறுதியே வரை நாளும் மெருகேற்றும். அவரது புதிய பொறுப்பேற்பு ஆட்சிக்கும் கட்சிக்கும் புதிய திருப்பத்தைத் தரும் என்று நம்பி தாய்க்கழகமான திராவிடர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது. சரக்கே இல்லாதவர்கள், வேறு வழிகளில் குற்றம் சொல்பவர்கள் இதனை சொல்லி வருகின்றனர். திராவிடர் இயக்கம் கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் இயக்கம். குடும்பம் குடும்பமாக கொள்கைகளை பின்பற்றுபவர்களாக இருக்கிறாகள். இது வாரிசு அரசியல் என்ற பேச்சே கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுதான் உதயநிதி வந்துள்ளார். அவர் வெளியே இருந்து கொண்டு வந்து சொறுகப்படவில்லை. அது அர்த்தமற்ற கேள்வி" என்று வீரமணி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow