சசிகலா முதல்வர் ஆகாதது தெய்வத்தின் முடிவு - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு!
தெய்வத்தின் முடிவால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு சசிகலாவால் முதல்வராக முடியவில்லை என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக ஆட்சியில் மக்களிடம் கண்டக்டர் வேலை வாங்கித் தருகிறேன் என கொள்ளையடித்து ஊழல்வாதியாக இருக்கிறார் என புகார் அளித்தவர் ஸ்டாலின். சிறைக்குச் சென்று இந்த செந்தில் பாலாஜியை இப்போது இவரை போன்று ஒரு தியாகியை நான் பார்த்ததில்லை என்று ஸ்டாலின் சொன்னால் தியாகியாக இருந்த வ உ சி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட இருக்கிற தியாகிகளெல்லாம் என்ன ஆவது தியாகி என்ற பெயருக்கு என்னதான் பேரு. பணத்தை கொள்ளையடித்து உங்களிடம் கொடுத்தால் அவர் தியாகி எனக் கூறிய திண்டுக்கல் சீனிவாசன் 471 நாள் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து வந்தார் அவர் வெளிவந்த நிலையில் அந்த வழக்கில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வதற்கு உள்ளாகவே அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். ஆனால் மு.க.அழகிரி இருக்கும்போது மதுரைக்கு ஸ்டாலின் வர முடிந்ததா? வந்தாரா? என தொண்டர்களை பார்த்து கேள்வி எழுப்பிய திண்டுக்கல் சீனிவாசன் வர முடியவில்லை என்று கையை தூக்கி பேசிய போது அவரது கையில் இருந்த மோதிரம் கழண்டு பறந்து சென்று கீழே விழுந்தது. தொடர்ந்து பேசிய ஸ்டாலின் மதுரை வந்தால் ஆல் அவுட் என்கிற நிலை இருந்தது. அதனால் அவர் வரவே இல்லை. தற்போது வந்து சமாதானம் செய்த பின்பு தான் அவர் வந்து சென்றார். இன்றைக்கு அழகிரி எங்கே போனார் என்று தெரியவில்லை.
நேற்று (செப். 29) நடைபெற்ற பவள விழா மாநாட்டில் கனிமொழி இல்லை. நாடாளுமன்றத்திற்கு 40 எம்பிக்களுக்கும் அவர்தான் தலைவி. ஆனால் அவர் மேடையில் இல்லை. துரைமுருகன் துணை முதலமைச்சர் ஆக கூடாதா? நேரு ஆக கூடாதா? பொன்முடி ஆக கூடாதா?. பொன்முடி இன்று வனத்துறை அமைச்சராக நான் வகித்த பதவிக்கு வந்து விட்டார். திமுக ஆட்சி அழிவுக்கு வந்துவிட்டது என்பதற்கு உதயநிதியை துணை முதல்வராக அறிவித்ததே சாட்சி.
தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சமமாக அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்று நினைத்தோம். நாங்கள் இருக்கும்போது சசிகலா முதல்வராக வர வேண்டும் என ஏற்பாடு நடந்தது. ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது அவரை ராஜினாமா செய்ய சொல்லி கடிதம் வாங்கிக் கொண்டு கூவத்தூரில் சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அடுத்த நாள் காலையில் சசிகலாவிற்கு தண்டனை என வருகிறது. இன்னாருக்கு இந்த பதவி கொடுக்க வேண்டும், இறைவன் முடிவெடுத்து விட்டார். யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கலாம். ஆனால் உருவாக்குவது தெய்வம் தானே” என்று பேசினார்.
What's Your Reaction?