இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா, நேற்று (செப். 28) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என்ற அறிவிப்பும் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இதனையடுத்து இன்று (செப். 29) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
“தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள அன்பு நிறைந்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!” என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
“துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலினுக்கும், புதிதாகப் பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்” என விசிக தலைவர் திருமாவளவன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா- கருணாநிதி- முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் வழியில் தான் கொண்ட கொள்கையில் உறுதி படைத்தவர். எளிய மக்களின் நாயகர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனையின்படி செயலாற்றுவோம். திராவிடத்தின் வழித்தோன்றலுக்கு இந்த மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டின் மக்களுக்கும் நன்றிகள்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்களை நேசிக்கக்கூடியவர்... ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்... மாரி செல்வராஜ் மகிழ்ச்சி!
“உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தாங்கள் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாராட்டுக்கள். தாங்கள் தங்கள் தந்தையின் வழிநின்று நல்லதொரு ஆட்சி ஆளுமை செய்திட மக்களின் தேவையை உணர்ந்து உவத்தல்காய்தலின்றி பொதுநிலை போற்றி அன்பும் நேசமும் காட்டி ஆட்சி செய்திட செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம்” என தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட நடிகர்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.