இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. பேரறிஞர் அண்ணாவால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், 75 ஆண்டுகளை கடந்து பவள விழாவை நிறைவு செய்துள்ளது. அதன்படி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற திமுக பவள விழா, நேற்று (செப். 28) காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அதேநேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகிறார் என்ற அறிவிப்பும் ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இதனையடுத்து இன்று (செப். 29) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இவருக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் வெற்றிநடை போட்டது. அடையாள அரசியலை மையமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஒருவர், அரசியல் ரீதியாக அதிகாரத்தில் இருந்தாலும் சாதிய பாகுபாடு காரணமாக சுயமரியாதை இழந்து இந்த சமுதாயத்திலிருந்து எப்படி ஒதுக்கப்படுகிறார் என்பதை மாரி செல்வராஜ் உணர்ச்சிப்பூர்வமாகக் காண்பித்திருப்பார். நீண்ட நாட்களாகத் திரையுலகம் பக்கமே வராமலிருந்த வைகைப்புயல் வடிவேலு, இந்த படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து, தன்னால் தனது ரசிகர்களை அழ வைக்கவும் முடியும் என நிரூபித்திருந்தார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் ரீதியாக இந்த படம் பெருமளவில் கைகொடுத்தது என்றே கூறலாம். மேலும் மாமன்னன் திரைப்படம் ஒரு நடிகராக உதயநிதி ஸ்டாலினுக்கு கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மாரி செல்வராஜின் பயோ பிக்கான ‘வாழை’ திரைப்படம் முதலில் ஓடிடி தளத்தில்தான் வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் தியேட்டரிக்கல் ரைட்ஸ் வாங்கிய உதயநிதி ஸ்டாலின், திரையங்குகளில் பிரமாண்டமாக வெளியிட உதவினார். இது மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதிக்கு இடையேயான நட்பை மேலும் பலப்படுத்தியது.
மேலும் படிக்க: புதிதாக அமைச்சர்களான கோவி செழியன், ராஜேந்திரன்... ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பிடித்தது எப்படி..?
இந்நிலையில், திருச்சி என் ஐ டி கல்லூரியில் நடைபெற்று வரும் பெஸ்டம்பர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று திருச்சி விமான நிலையத்திற்கு மாரி செல்வராஜ் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வெகு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த செய்திதான் இது. தற்பொழுது பதவியேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைவருடைய எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் அவரது பணிகள் இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். உதயநிதி ஸ்டாலின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அவர் மக்களை நேசிக்கக் கூடிய மனிதர். மக்களிடம் அன்பாக பழகக்கூடிய மனிதர். அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.