அரசியல்

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை கருத்து: ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை கருத்து: ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!
Nainar Nagendran and Aadhav Arjuna
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துச் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்.

திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது பிரதமர் நரேந்திர மோடியின் மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.

அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல. அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் ரசிகர்களிடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.