அரசியல்

85% வாக்குப்பதிவு: யாருக்குச் சாதகம்? திமுக - அதிமுக முகாம்களில் நிலவும் உச்சகட்ட பதற்றம்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாறு காணாத 85 சதவீத வாக்குப்பதிவு, பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

85% வாக்குப்பதிவு: யாருக்குச் சாதகம்? திமுக - அதிமுக முகாம்களில் நிலவும் உச்சகட்ட பதற்றம்!
DMK & ADMK
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகியுள்ள வரலாறு காணாத 85 சதவீத வாக்குப்பதிவு, பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவினரிடையே பெரும் விவாதத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில் 4.82 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2021 தேர்தலை விடச் சுமார் 23 லட்சம் வாக்குகள் அதிகமாகும். இந்த உயர்வு யாருடைய வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற கணிப்பில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூடுதல் வாக்குகள் மாற்றத்தை விரும்புபவர்களுடையதா அல்லது புதிய கட்சிகளின் வருகையால் ஏற்பட்ட தாக்கமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

திமுகவின் வியூகம் மற்றும் நம்பிக்கை

கூடுதலாகப் பதிவாகியுள்ள வாக்குகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கூட்டணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதில், ஆட்சிக்கு எதிரான ஓட்டுகளைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரித்திருப்பார் என்றும், அது திமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். எனவே, 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என அவர்கள் முதலமைச்சருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

அதிமுகவின் கணிப்பும் கூட்டணிக் கணக்கும்

மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன. பட்டியலின மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இந்த முறை தவெக-விற்குச் சென்றிருப்பதாக அதிமுகவினர் கருதுகின்றனர். நகரப்புறங்களில் வாக்குகள் மும்முனைப் போட்டியில் பிரியும்போது, அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.

விஜய் மற்றும் சீமானின் தாக்கம்

இந்தத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் பிரித்துள்ள வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். குறிப்பாக சீமானின் 5 சதவீத வாக்குகளை விஜய் ஈர்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், முகவர்கள் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் இரு திராவிடக் கட்சிகளுக்கும் கடும் டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.