புதிதாக அமைச்சர்களான கோவி செழியன், ராஜேந்திரன்... ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பிடித்தது எப்படி..?

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள தமிழக அமைச்சரவையில், கோவி செழியன், ரா ராஜேந்திரன் இருவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களது பயோடேட்டாவை தற்போது பார்க்கலாம்.

Sep 29, 2024 - 17:04
 0
புதிதாக அமைச்சர்களான கோவி செழியன், ராஜேந்திரன்... ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பிடித்தது எப்படி..?
யார் இந்த கோவி செழியன், ரா ராஜேந்திரன்?

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், 5வது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருந்தார். அதன்பின்னர் இதுகுறித்த அறிவிப்பு நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக வெளியானது. அதன்படி 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தற்போது வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 

அதேபோல், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பால் வளத்துறை அமைச்சராகியுள்ளார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜுக்கு, மனிதவள மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி, மீண்டும் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கூடுதலாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜேந்திரன், திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ கோவி செழியன், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ. நாசர் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். கோவி செழியனுக்கு உயர்கல்வித்துறை, நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறை, ரா ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன. புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இவர்களில் கோவி செழியனும் ராஜேந்திரனும் முதன்முறையாக அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 

திமுகவின் தலைமை கழகப் பேச்சாளர், மாணவரணி இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தார் கோவி செழியன். சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில், தஞ்சாவூர், திருவிடைமருதூர் சட்டசபை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது தமிழக அரசின் தலைமை கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் உயர்கல்வித்துறைக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை ஆகும்.  

அதேபோல், 1985ல் கருணாநிதியால் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளராகவும், 1992ல் திமுக இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டவர் ரா ராஜேந்திரன். 2004ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பின் மாநிலச் செயலாளராக பணியாற்றினார். 2006ல் பனமரத்துப்பட்டியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார், 2011ல் சேலம் மேற்கு தொகுதியில் தோல்வியடைந்தார். பின்னர் 2016, 2021-ம் ஆண்டுகளில் சேலம் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார் ராஜேந்திரன். முக்கியமாக 2021 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் 11 தொகுதிகளில் போட்டியிட்டனர். அவர்களில் திமுக சார்பில் வெற்றிப் பெற்ற ஒரே எம்.எல்.ஏ ராஜேந்திரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow