அரசியல்

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!
TVK
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் வேளையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பாஜக, அதிமுக அல்லது சசிகலா, ராமதாஸ் ஆகியோருடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்தச் சூழலில், அத்தகைய தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று தவெக தலைமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், "வதந்திகளை நம்ப வேண்டாம்! சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாஜக / அதிமுக அல்லது சசிகலா, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.