அரசியல்

அஇபுதமமுக: கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா; 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

அஇபுதமமுக: கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா; 'தென்னந்தோப்பு' சின்னத்தில் போட்டி!
Sasikala
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது புதிய கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கட்சிப் பெயர், சின்னம் மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் விளக்கமளித்தார்.

கட்சி பெயர் அறிவிப்பு

ராமநாதபுரத்தில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்ற மாநாட்டில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக் கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, இன்று தனது கட்சியின் பெயரை அறிவித்தார். "அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்" (அஇபுதமமுக) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துவமான அரசியல் பாதையை முன்னெடுக்கத் தயாராகியுள்ளது.

சின்னத்தின் ரகசியம்: தனி மரமல்ல, தோப்பு!

தனது கட்சிக்குத் தேர்தல் ஆணையம் 'தென்னந்தோப்பு' சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்த சசிகலா, "நான் தனி மரமாக வரவில்லை, தோப்பாகத்தான் வந்துள்ளேன். நான் எப்போதும் மக்களுடன்தான் இருப்பேன் என்பதற்கு இந்தத் தென்னந்தோப்பு சின்னமே சாட்சி" என்று அவர் குறிப்பிட்டார். அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் லட்சியங்களைச் சுமந்து இந்த இயக்கம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்த நிலைப்பாடு

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய திமுக அரசு தமிழ்நாட்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த நிலைமைக்கு முடிவு கட்டவே புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.