அரசியல்

"டெல்லிக்கு வாங்க.." விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.


TVK Vijay
கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் மதியழகன் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

தொடரும் சிபிஐ விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஜய்க்கு ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயை, அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை செய்தனர். அப்போது கேட்கப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகளில் சிலவற்றிற்குப் பதிலளிக்க விஜய் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்ததாகத் தெரிகிறது.

நாளை மீண்டும் ஆஜராக உத்தரவு

இந்நிலையில், நிலுவையில் உள்ள கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், கூடுதல் விசாரணைக்காகவும் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் விஜய் நேர்காணல் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் திடீர் சம்மன் அவரது அரசியல் பயணத்தில் ஒரு தடையாகப் பார்க்கப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

முக்கியமான கட்சிப் பணிகளுக்கு இடையே சிபிஐ மீண்டும் விஜயை அழைத்திருப்பது தமிழக அரசியலில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. சிபிஐ விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது அவகாசம் கோருவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் தவெக-வின் எதிர்காலத் திட்டங்களில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.