அரசியல்

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!

"தந்தை - மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், கட்சியை வைத்துதான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" என பாமக சின்னம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!
PMK
பாமகவின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் விசாரணை, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.வி. தமிழ்செல்வி முன்னிலையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனின் வாதம்

இந்த வழக்கில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தன்னை ஒரு தரப்பாக இணைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். "ராமதாஸ் தன்னைத் தன்னிச்சையாகத் தலைவர் என அறிவித்துக் கொண்டு கட்சிப் பெயரில் வழக்குத் தொடர்ந்துள்ளார். கட்சியின் நிர்வாக முடிவுகளில் பொதுச்செயலாளரான எனக்கும் பங்குண்டு, எனவே என்னை இந்த வழக்கில் இணைக்க வேண்டும்" என்று அவர் வாதிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் கேள்விகள்

வடிவேல் ராவணனின் கோரிக்கையை முன்வைத்து வாதங்கள் நடைபெற்ற போது, நீதிபதி ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார். "தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகள் நாளை சரியாகலாம். ஆனால், கட்சியின் பெயரை வைத்துத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சட்ட விதிகளின்படி தான் முடிவெடுக்க முடியும்" என்று தெரிவித்தார். மேலும், "கட்சியின் பொதுச்செயலாளரான வடிவேல் ராவணனை இந்த வழக்கில் இணைப்பதில் என்ன சிக்கல் உள்ளது?" என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தடை நீட்டிப்பு மற்றும் அடுத்தகட்ட விசாரணை

உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ராமதாஸின் வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், ஆவணங்களை எதிர்மனுதாரர் வழங்கக் கோரி அன்புமணி தாக்கல் செய்த மனுவையும் நாளை (மார்ச் 17) விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.