அரசியல்

திமுக எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது- விஜய் குற்றச்சாட்டு

நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

திமுக எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது- விஜய் குற்றச்சாட்டு
தவெக தலைவர் விஜய்

சர்வதேச மகளிர் தினம் 2025: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்'  கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமை, சாதனை, பாலின சமத்துவம் மற்றும் அவர்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச மகளிர் தினம்' ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாப்படுகிறது. 

பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூர்வதும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் அதிகரிப்பதுமே இந்த தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கமாகும்.

இந்த நாள் கொண்டாட்டத்திற்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரித்து அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான முன்முயற்சியாகும். 'சர்வதேச மகளிர் தினத்தை’ ஒட்டி பெண்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சர்வதேச மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துகள். பாதுகாப்பாக இருந்தால் தானே பெண்கள் சந்தோஷத்தை உணர முடியும்.

எந்த பாதுகாப்பும் இல்லாதபோது எந்த சந்தோஷமும் இருக்காது என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நீங்கள், நாம் எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் எப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது. எல்லாம் இங்கு மாறக்கூடியது தானே.. மாற்றத்திற்குரியது தானே.. கவலைப்படாதீர்கள்.

2026-இல் நாம் எல்லாரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களோடு நான் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து பட்டியல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.