உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் நேரில் சந்தித்தார்.
கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. பிரமாண்டமான தனி உலகமாக காட்சியளிக்கும் இந்த மையத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் நிறுவியுள்ளார். இந்த மையத்தில் 112 அடி உயரத்தில் ஆதி யோகி சிலை உள்ளது. இங்கு இரண்டு லட்சம் பேருக்கு சமைக்கும் வசதி இருப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் லட்சகணக்கானோர் குவிகின்றனர்.
மகா சிவராத்திரி அன்று இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், வெளிநாட்டினர் என பலர் கலந்து கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல், ஈஷா யோகா மையத்திற்கு பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இவர்கள் பல நாட்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கி யோகா மேற்கொள்கின்றனர்.
இவர்களுக்கான உடை, உணவு, இருப்பிடம் ஆகியவை ஈஷா யோகா மையம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரி அன்று நடைபெறும் ஈஷா யோகா மைய நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவும் நடனமாடி பார்வையாளர்களை கவர்வார். நாட்டின் பிரதமரில் தொடங்கி பல மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னணித் தொழிலதிபர்கள் எனப் பல்வேறு உயர் தரப்புகளையும் தன் தொடர்பு வட்டத்தில் வைத்துக் கொண்டு ஜக்கி வாசுதேவ் பறந்து வருகிறார்.
இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, "சத்குரு அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய ஆன்மீகம் குறித்தும், சமூகங்களை மாற்றி அமைப்பதில் அதன் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினோம்" எனக் கூறியுள்ளார்.
அதேபோல் ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பதிவிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், "உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது தேசத்தின் நாகரீக அம்சங்களில் அவரது ஈடுபாடும் ஆர்வமும் போற்றத்தக்கது." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது அமித்ஷாவிற்கு ஆதியோகி திருவுருவச் சிலையை சத்குரு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?