Red Alert Issued in Gujarat : குஜராத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திர நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜுனகர், கிர் சோம்நாத், அம்ரேலி, பவ்நகர் மற்றும் பொடாட் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 50 மிமீ முதல் 200 மிமீ வரை கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் வதோதராவின் விஸ்வாமித்ரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், 12 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பை குஜராத் அரசு கண்டுகொள்ளாததால் கனமழை வெள்ளத்தில் சிக்கி 40,000க்கும் அதிகமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 14 குழுக்களுக்கும், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 22 குழுக்க ளுக்கும் மற்றும் 6 இராணுவக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 17,000 பேர் மட்டுமே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ராஜஸ்தானில் இருந்து சவுராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் அம்மாநில அரசு விடுத்துள்ளது. ஏற்கெனவே குஜராத்தின் 12 மாவட்டங்கள் கனமழை வெள்ளத்தில் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், மேலும் 72 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.